மலேசிய எழுத்தாளர் திரு. சீ. அருண் அவர்கள் எழுதிய 'சயாம்-பர்மா மரண இரயில்பாதை - மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு' என்ற நூல் அண்மையில் கிள்ளான் ஸ்ரீ சுந்ரராஜ பெருமாள் ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. கிள்ளான் செம்பருத்தி மாதிகை குழுவினரின் ஏற்பாட்டில் நடந்தேறிய இந்த நூல் வெளியீட்டில் ஏறக்குறைய 250 தமிழ் ஆர்வளர்கள் வருகை தந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த நூல் வெளியீட்டு நிகழ்வை ஓம்ஸ் குழுமத்தின் நிர்வாக தலைமை இயக்குனர் திரு. ஓம்ஸ். தியாகராஜன் அவர்களின் தலைமை ஏற்று சிறப்பித்தார். டான் ஸ்ரீ குமரன், உயர்திரு முத்தையா, உயர்திரு கலைமணி, செம்பருத்தி மாதிகையின் ஆசிரியர் உயர்திரு க.ஆறுமுகம், மலேசியா இன்று வலைப்பதிவாசிரியர் உயர்திரு. ஜி.பி. காத்தையா, கிள்ளான் செம்பருத்தி வாசகர் வட்டத் தலைவர் திரு. கோவிந்தராசு, கவிஞர் பொன்.நாவலன், கவிஞர் பங்சார் அண்ணாமலை, எழுத்தாளர் திரு. ந.வரதராசு, கிள்ளான் ஸ்ரீ சுந்தரராச பெருமாள் ஆலயத் தலைவர் திரு. சி.த. ஆனந்தகிருட்ணன் ஆகிய வட்டார பிரமுகர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி பிற்பகல் 3.00 மணிக்கே தொடங்கிற்று. திரு. கோவிந்தராசு வரவேற்புரை வழங்கினார். கவிஞர் பொன்.நாவலன் அவர்களும் கவிஞர் பங்சார் அண்ணாமலை அவர்களும் கவிதை விருந்து படைத்தனர்.

முதல் சிறப்புரையாக ஐயா காத்தையா அவர்களின் உரை அமைந்தது. ஐயா அவர்களின் பதிவுகள் எவ்வளவு சூடாக இருக்குமோ அது போலவே அவரது உரையும் இருந்தது. நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை தமது ஆவேசப் பேச்சினால் சிந்திக்கவும் செய்தார். மலேசிய நாட்டின் வளர்ச்சிக்கு தமிழர்களின் அளப்பரிய பங்கு நாளுக்கு நாள் சிதைக்கப்பட்டும்; மறக்கப்பட்டும்; மறைக்கப்பட்டும் வருகின்றது. இதற்கு இந்த நாட்டில் இதுவரை எந்த குறிப்பிடும்படியான நிகழ்வுகளையும் நாம் ஆவணப்படுத்தி வைக்காததுவே காரணம் என்றார். இந்நாடு நமது சரித்திரத்தையே மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் நாளைய தலைமுறையினருக்குத் தவறான, நம்மை மாசுபடுத்தும், சிறுமைபடுத்தும் செய்திகளே தகவல் சாதனங்கள் மூலமும் கல்வி திட்டத்தின் மூலமும் ஊட்டிவிடப்படும் என்று தனது ஆதங்கங்களை முன்வைத்துப் பேசினார்.

இரண்டாவது சிறப்புரையை புக்கிட் மெலாவாத்தி சட்ட மன்ற உறுப்பினர் உயர்திரு முத்தையா வழங்கினார். அவரைத் தொடர்ந்து பேசிய ஸ்ரீ சுந்தரராச பெருமாள் ஆலயத் தலைவர் திரு. சி.த. ஆனந்தகிருட்ணன் அவர்கள், ஆலயங்கள் இறை காரியங்களை மட்டுமே செய்து கொண்டிருக்காமல் மக்கள் ஒன்றுகூடும் இடங்களாக மாறவேண்டும் என்றார். அண்மைய காலமாக இந்த ஆலயத்தில் பல நூல் வெளியீடுகள் நடைபெற்று வருவதையும் சுட்டிக் காட்டினார்.

நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது செம்பருத்தி மாதிகையின் ஆசிரியர் உயர்திரு க.ஆறுமுகம் அவர்களின் சிறப்புரை. அவரது உரையில் இடம் பெற்ற ஒரு கருத்தை மட்டும் இங்கே முன்வைக்கிறேன். 1786 ஆம் ஆண்டு முதல் 1957 ஆண்டுவரை அன்றைய மலாயாவிற்கு வந்த மொத்த இந்தியர்களின் எண்ணிக்கை 42 இலட்சம். பல சூழ்நிலைகளின் காரணமாக மீண்டும் இந்தியா திரும்பியவர்களின் எண்ணிக்கை 30 இலட்சம். 1957 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியர்களின் எண்ணிக்கை 8 இலட்சமே இருந்திருக்கின்றது. ஆனால், இதில் 62 விழுக்காட்டினர் (ஏறக்குறைய 3 இலட்சம்) மலாயா மண்ணில் பிறந்தவர்கள். அப்படி என்றால், இந்தியாவிற்குத் திரும்பாமல் மலாயாவிலே தங்கிய 12 இலட்சத்தில் 1957 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது உயிரோடு இருந்தவர்கள் 5 இலட்சம் மட்டுமே. மீதமுள்ள 8 இலட்சம் மூதாதையர்களை இந்த மண்ணில் புதைத்து இன்றைய மலேசியாவை வார்த்தெடுத்திருக்கின்றோம் என்ற மிகப் பெரிய உண்மையைக் கூறிய போது வருகையாளர்கள் அனைவரும் திகைத்துப் போனார்கள். இந்த மாபெரும் உயிர் இழப்புகளுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் தலையாய ஒன்றுதான் இந்த பர்மா-சயாம் மரண இருப்புப்பாதை கட்டுமானப்பணி என்று நீண்ட விரிந்த உரையை வழங்கி சபையோரை சிந்திக்கும்படி செய்து விடைபெற்றார்.

அவரைத் தொடர்ந்து உயர்திரு கலைமணி அவர்கள் நூல் ஆய்வினை செய்தார். வரலாற்று தவறுகள் அல்லது பிழைகள் தொடராமல் இருக்க அவரவர் வாழ்க்கையை ஆவணப்படுத்துமாறு தமது நூல் ஆய்வின் ஊடே கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, ஓம்ஸ் குழுமத்தின் நிர்வாக தலைமை இயக்குனர் திரு. ஓம்ஸ். தியாகராஜன் அவர்கள் தலைமையுரை ஆற்றி நூலினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

இறுதியில் நூலின் ஆசிரியர் திரு. அருண் அவர்கள் ஏற்புரை வழங்கினார். இந்த நூலானது ஐந்தாண்டுகால கடும் உழைப்பின் பயன் என்றும் தெரிவித்தார். இந்த நூல் உதயமாக தன்னோடு மற்றும் பலரின் உழப்பும் பங்கும் இருக்கின்றது என்பதை தெரிவித்து நிகழ்வுக்கு விடை கொடுத்தார்.


'சயாம்-பர்மா மரண இரயில்பாதை - மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு' என்ற நூல் வெளியீடு மாலை 7.00 மணியளவில் கடும் மழையின் கண்ணீர்த் துளிகளோடு நிறைவுற்றது.




என் பார்வையில்...


குறித்த நேரத்தைவிட்டு தாமதமாக நிகழ்வுகளைத் துவங்குவது இன்றைய நமது கலாச்சாரத்தோடு இணைந்துவிட்ட மறபாகிவிட்டது. பொது மக்கள் வந்து காத்திருந்தாலும் நேரத்தோடு கூட்டத்திற்கு வரும் தலைவர்கள் அரிதாகவே இருக்கின்றனர். மக்களின் வருகைக்கு காத்திருப்பதை விடுத்து இன்றைய நிலையில் தலைவர்களுக்கே அதிகம் காத்திருக்க வேண்டியுள்ளது. இவர்கள் வந்தவுடன்தான் நிகழ்ச்சியைத் தொடக்க வேண்டும் என்ற வேதாந்தத்தை மாற்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்வர வேண்டும்.



இந்த நூல் வெளியீட்டுக்கு சிறப்பு வருகையாளர்கள் என்று சில தலைவர்களின் நிழற்படங்கள் பொறிக்கப்பட்ட பதாகை ஒன்றைக் கண்டேன். அதில் மாண்புமிகு சார்ல்ஸ் சந்தியாகு, மாண்புமிகு மாணிக்கவாசகம், மாண்புமிகு ரோனி லியூ, மாண்புமிகு மானோகரன், மாண்புமிகு Dr. சேவியர் ஜெயக்குமார் ஆகியோரின் நிழற்படங்களும் கண்களில் பட்டது. இந்த மாண்புமிகுகளின் அனுமதி பெற்று உறுதிபடுத்தப்பட்ட பின்னரே இந்த பதாகை அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், அதில் ஒருவர்கூட வராதது நூலின் ஆசிரியருக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்திருக்கக்கூடும். வருகையாளர்கள் மத்தியில் அவர்களின் செய்கை வருத்தத்தை தந்தது மட்டுமின்றி சினமடையவும் செய்ததாகவே உணர்ந்தேன். கல்வி தொடர்புடைய, தன் சொந்த சமுதாயம் கடந்து வந்த சூழல்களை எடுத்துக்கூறும் ஒரு சரித்திர நூலினை மதிக்கும் மாண்பை இழந்தவர்களைத்தானா மாண்புமிகுக்கள் என்று புகழ்பாடுகிறோம்? இவர்களில் மாண்புமிகு மாணிக்கவாசகம் அவர்களுக்கு உடல் நலக் கோளாறு என்று கேள்விப்பட்டேன். மற்றவர்கள் எதை நோக்கி பயணிக்கிறார்கள்? ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தலும், கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதும் தலைமைத்துவ பண்புகளில் ஒரு பகுதிதானே!

விளையும் பயிர் முளையும் போதே தெரியுமாம். இதுபோன்ற தலைவர்களுக்கு சுட்டிக்காட்டி முட்டுக் கொடுத்து வளரும் போதே சரி செய்துவிட வேண்டும். தவறாக வளர்ந்து விருட்சமாகிவிட்டால் அகற்றுவது எவ்வளவு சிரமம் என்று மலேசிய இந்தியர்களுக்கு கடந்த 30 ஆண்டுகள் கொடுத்த அனுபவப் பாடம் ஒன்றே போதுமானது.

சிறந்த சமுதாயம் செய்யும் கடப்பாடு ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது. நிகழ்கால சீறிய + தூரநோக்கு சிந்தனையே நாளைய சிறந்த சமுதாய உருவாக்கத்திற்கு வித்தாகும்.


சிந்திப்போம்! செயல்படுவோம்!







பி.கு : நிழற்படங்கள் தரம் குறைந்திருப்பதற்கும் சற்று தாமதமாக நூல் வெளியீட்டுச் செய்திகளை பதிவேற்றியதற்கும்.... மன்னிப்பு கோருகிறேன்.



9 comments:

Sathis Kumar said...

நிகழ்வு குறித்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே.. அடுத்த முறை வரலாற்று ஆவண நூட்களாகட்டும், ஒரு துறையைச் சார்ந்த ஆய்வு நூலாகட்டும், நன்கு கற்ற கல்விமான்களை நிகழ்விற்கு அழைப்பது சாலச் சிறந்ததாகும். அரசியல்வாதிகளை அழைப்பதில் பயனேதும் இல்லை என்பது எனது கருத்து..

குமரன் மாரிமுத்து said...

சதீசு குமார் அவர்களுக்கு நன்றி.

தங்கள் கருத்தை நான் முழுமையாக ஏற்கிறேன். நானும் அதே கருத்தைக் கொண்டுள்ளேன்.

பல சூழ்நிலைகளில் இலக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்பாட்டாளர்கள் மக்கள் கூட்டம் அதிகம் வரவேண்டும் என்ற நோக்கோடு அரசியல்வாதிகளை அழைப்பதாகத் தெரிகிறது. ஆனால், நடைமுறையில் அவ்வாறு நிகழவில்லை என்பதுதான் உண்மை. அரசியல்வாதிகள் இல்லாது இலக்கியவாதிகளையே வைத்து நடத்தும் இலக்கிய கூட்டங்களுக்கு உள்ளே நுழையக்கூட சில வேளைகளில் இடம் கிடைக்காத சூழலையும் பார்த்திருக்கிறேன்.

இதுபோன்ற சிந்தனை மாறவேண்டும். இல்லையேல் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு / இலக்கிய நிகழ்வுகளின்பால் மக்களின் ஆதரவு பெருகுவதற்கு இதுபோன்ற அம்சங்கள் முட்டுக்கட்டையாக அமையும் என்பது என் கருத்து.

கிருஷ்ணா said...

நண்பா.. எல்லா அரசியல்வாதிகளும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள்! ஒரு கவிதை ஞாபகத்திற்கு வருகிறது:

சென்னை

இங்கே,
உழைப்பாளிகள்
சிலையில் கூட
உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்..

அரசியல்வாதிகள்
சிலையில் கூட
பேசிக்கொண்டே இருக்கிறார்கள்!!

VIKNESHWARAN ADAKKALAM said...

தகவலுக்கு நன்றி... புத்தகத்தை பற்றிய செய்தியையும் குறிப்பிட்டீர்கள் என்றால் நலமடையலாம்.

குமரன் மாரிமுத்து said...

நண்பர் கிருட்ண மூர்த்தியாரின் வருகைக்கு நன்றி.

சூழலுக்கு ஏற்ற கவிதை வரிகளை தந்தமைக்கு மீண்டும் நன்றி.


வாழ்க விக்கி....

//புத்தகத்தை பற்றிய செய்தியையும் குறிப்பிட்டீர்கள் என்றால் நலமடையலாம்.//

புத்தகத்தை பணம் கொடுத்து வாங்கி, படித்து செய்திகளை அறிந்து கொள்வதே நலம் என்பது என் கருத்து நண்பரே... அதுவே நாம் நூல் வெளியிட்டாளர்களுக்கு தரும் ஊக்குவிப்பாகும்....

Suresh said...

நல்ல நிகழ்ச்சி

i liked ur blog and have become ur follower.

You can also visit my blog and if you like it u can be my follower :-)

Hope u like it

Unknown said...

/--இறுதியில் நூலின் ஆசிரியர் திரு. அருண் அவர்கள் ஏற்புரை வழங்கினார். இந்த நூலானது ஐந்தாண்டுகால கடும் உழைப்பின் பயன் என்றும் தெரிவித்தார்.--/

இந்த கடின உழைப்பிற்கு என்ன கைம்மாறு செய்ய முடியும் புத்தகத்தை வாங்குவதைத் தவிர....

'சயாம்-பர்மா மரண இரயில்பாதை - மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு' எனற நூலினைப் பற்றிய செய்தியினை விக்நேஷ்வரனுடையபதிவில் நீண்ட நாட்களுக்கு முன்பு பார்த்தேன். உடனே புத்தகத்தை வாங்கிவிட வேண்டுமென்று அவசரமாக அவருக்கு ஒரு மின்னஞ்சலும் அனுப்பினேன். துரு துஷ்ட வசமாக அவரிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை.

பிறகு என்னுடைய தம்பியிடம் சொல்லி புத்தகத்தை வாங்கிவிட்டேன். எப்படியும் மேமாதம் புத்தகம் என் கைகளுக்கு வந்துவிடும். படித்துவிட்டு பதிவிடுகிறேன்.

நல்ல பதிவு தொடருங்கள்.

நட்புடன்,
கிருஷ்ணப் பிரபு,
சென்னை.

குமரன் மாரிமுத்து said...

வாங்க சுரேசு, வாங்க...

தங்கள் வரவு நல்வரவாகுக..

நமது தொடர்புகள் தொடரட்டும்.....

குமரன் மாரிமுத்து said...

சென்னை பிரபு அவர்களுக்கு, வணக்கம்.

வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்க்கப்பட்ட தமிழர்கள், பல சூழ்நிலைகளில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். அவர்கள் அடைந்த துன்பங்கள் எண்ணிலடங்காது; சொற்களில் அடங்காது.

இப்படி மனித குலத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வரலாற்று ஆதாரங்களோடு காட்டும் நூல்தான் இந்த நூல்.

படித்து 'மகிழுங்கள்' என்று சொல்ல இயலாது; படித்துவிட்டு பதிவிடுங்கள்.

நம் தொடர்பு தொடரும்...