மலேசிய எழுத்தாளர் திரு. சீ. அருண் அவர்கள் எழுதிய 'சயாம்-பர்மா மரண இரயில்பாதை - மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு' என்ற நூல் அண்மையில் கிள்ளான் ஸ்ரீ சுந்ரராஜ பெருமாள் ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. கிள்ளான் செம்பருத்தி மாதிகை குழுவினரின் ஏற்பாட்டில் நடந்தேறிய இந்த நூல் வெளியீட்டில் ஏறக்குறைய 250 தமிழ் ஆர்வளர்கள் வருகை தந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த நூல் வெளியீட்டு நிகழ்வை ஓம்ஸ் குழுமத்தின் நிர்வாக தலைமை இயக்குனர் திரு. ஓம்ஸ். தியாகராஜன் அவர்களின் தலைமை ஏற்று சிறப்பித்தார். டான் ஸ்ரீ குமரன், உயர்திரு முத்தையா, உயர்திரு கலைமணி, செம்பருத்தி மாதிகையின் ஆசிரியர் உயர்திரு க.ஆறுமுகம், மலேசியா இன்று வலைப்பதிவாசிரியர் உயர்திரு. ஜி.பி. காத்தையா, கிள்ளான் செம்பருத்தி வாசகர் வட்டத் தலைவர் திரு. கோவிந்தராசு, கவிஞர் பொன்.நாவலன், கவிஞர் பங்சார் அண்ணாமலை, எழுத்தாளர் திரு. ந.வரதராசு, கிள்ளான் ஸ்ரீ சுந்தரராச பெருமாள் ஆலயத் தலைவர் திரு. சி.த. ஆனந்தகிருட்ணன் ஆகிய வட்டார பிரமுகர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி பிற்பகல் 3.00 மணிக்கே தொடங்கிற்று. திரு. கோவிந்தராசு வரவேற்புரை வழங்கினார். கவிஞர் பொன்.நாவலன் அவர்களும் கவிஞர் பங்சார் அண்ணாமலை அவர்களும் கவிதை விருந்து படைத்தனர்.

முதல் சிறப்புரையாக ஐயா காத்தையா அவர்களின் உரை அமைந்தது. ஐயா அவர்களின் பதிவுகள் எவ்வளவு சூடாக இருக்குமோ அது போலவே அவரது உரையும் இருந்தது. நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை தமது ஆவேசப் பேச்சினால் சிந்திக்கவும் செய்தார். மலேசிய நாட்டின் வளர்ச்சிக்கு தமிழர்களின் அளப்பரிய பங்கு நாளுக்கு நாள் சிதைக்கப்பட்டும்; மறக்கப்பட்டும்; மறைக்கப்பட்டும் வருகின்றது. இதற்கு இந்த நாட்டில் இதுவரை எந்த குறிப்பிடும்படியான நிகழ்வுகளையும் நாம் ஆவணப்படுத்தி வைக்காததுவே காரணம் என்றார். இந்நாடு நமது சரித்திரத்தையே மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் நாளைய தலைமுறையினருக்குத் தவறான, நம்மை மாசுபடுத்தும், சிறுமைபடுத்தும் செய்திகளே தகவல் சாதனங்கள் மூலமும் கல்வி திட்டத்தின் மூலமும் ஊட்டிவிடப்படும் என்று தனது ஆதங்கங்களை முன்வைத்துப் பேசினார்.

இரண்டாவது சிறப்புரையை புக்கிட் மெலாவாத்தி சட்ட மன்ற உறுப்பினர் உயர்திரு முத்தையா வழங்கினார். அவரைத் தொடர்ந்து பேசிய ஸ்ரீ சுந்தரராச பெருமாள் ஆலயத் தலைவர் திரு. சி.த. ஆனந்தகிருட்ணன் அவர்கள், ஆலயங்கள் இறை காரியங்களை மட்டுமே செய்து கொண்டிருக்காமல் மக்கள் ஒன்றுகூடும் இடங்களாக மாறவேண்டும் என்றார். அண்மைய காலமாக இந்த ஆலயத்தில் பல நூல் வெளியீடுகள் நடைபெற்று வருவதையும் சுட்டிக் காட்டினார்.

நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது செம்பருத்தி மாதிகையின் ஆசிரியர் உயர்திரு க.ஆறுமுகம் அவர்களின் சிறப்புரை. அவரது உரையில் இடம் பெற்ற ஒரு கருத்தை மட்டும் இங்கே முன்வைக்கிறேன். 1786 ஆம் ஆண்டு முதல் 1957 ஆண்டுவரை அன்றைய மலாயாவிற்கு வந்த மொத்த இந்தியர்களின் எண்ணிக்கை 42 இலட்சம். பல சூழ்நிலைகளின் காரணமாக மீண்டும் இந்தியா திரும்பியவர்களின் எண்ணிக்கை 30 இலட்சம். 1957 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியர்களின் எண்ணிக்கை 8 இலட்சமே இருந்திருக்கின்றது. ஆனால், இதில் 62 விழுக்காட்டினர் (ஏறக்குறைய 3 இலட்சம்) மலாயா மண்ணில் பிறந்தவர்கள். அப்படி என்றால், இந்தியாவிற்குத் திரும்பாமல் மலாயாவிலே தங்கிய 12 இலட்சத்தில் 1957 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது உயிரோடு இருந்தவர்கள் 5 இலட்சம் மட்டுமே. மீதமுள்ள 8 இலட்சம் மூதாதையர்களை இந்த மண்ணில் புதைத்து இன்றைய மலேசியாவை வார்த்தெடுத்திருக்கின்றோம் என்ற மிகப் பெரிய உண்மையைக் கூறிய போது வருகையாளர்கள் அனைவரும் திகைத்துப் போனார்கள். இந்த மாபெரும் உயிர் இழப்புகளுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் தலையாய ஒன்றுதான் இந்த பர்மா-சயாம் மரண இருப்புப்பாதை கட்டுமானப்பணி என்று நீண்ட விரிந்த உரையை வழங்கி சபையோரை சிந்திக்கும்படி செய்து விடைபெற்றார்.

அவரைத் தொடர்ந்து உயர்திரு கலைமணி அவர்கள் நூல் ஆய்வினை செய்தார். வரலாற்று தவறுகள் அல்லது பிழைகள் தொடராமல் இருக்க அவரவர் வாழ்க்கையை ஆவணப்படுத்துமாறு தமது நூல் ஆய்வின் ஊடே கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, ஓம்ஸ் குழுமத்தின் நிர்வாக தலைமை இயக்குனர் திரு. ஓம்ஸ். தியாகராஜன் அவர்கள் தலைமையுரை ஆற்றி நூலினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

இறுதியில் நூலின் ஆசிரியர் திரு. அருண் அவர்கள் ஏற்புரை வழங்கினார். இந்த நூலானது ஐந்தாண்டுகால கடும் உழைப்பின் பயன் என்றும் தெரிவித்தார். இந்த நூல் உதயமாக தன்னோடு மற்றும் பலரின் உழப்பும் பங்கும் இருக்கின்றது என்பதை தெரிவித்து நிகழ்வுக்கு விடை கொடுத்தார்.


'சயாம்-பர்மா மரண இரயில்பாதை - மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு' என்ற நூல் வெளியீடு மாலை 7.00 மணியளவில் கடும் மழையின் கண்ணீர்த் துளிகளோடு நிறைவுற்றது.




என் பார்வையில்...


குறித்த நேரத்தைவிட்டு தாமதமாக நிகழ்வுகளைத் துவங்குவது இன்றைய நமது கலாச்சாரத்தோடு இணைந்துவிட்ட மறபாகிவிட்டது. பொது மக்கள் வந்து காத்திருந்தாலும் நேரத்தோடு கூட்டத்திற்கு வரும் தலைவர்கள் அரிதாகவே இருக்கின்றனர். மக்களின் வருகைக்கு காத்திருப்பதை விடுத்து இன்றைய நிலையில் தலைவர்களுக்கே அதிகம் காத்திருக்க வேண்டியுள்ளது. இவர்கள் வந்தவுடன்தான் நிகழ்ச்சியைத் தொடக்க வேண்டும் என்ற வேதாந்தத்தை மாற்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்வர வேண்டும்.



இந்த நூல் வெளியீட்டுக்கு சிறப்பு வருகையாளர்கள் என்று சில தலைவர்களின் நிழற்படங்கள் பொறிக்கப்பட்ட பதாகை ஒன்றைக் கண்டேன். அதில் மாண்புமிகு சார்ல்ஸ் சந்தியாகு, மாண்புமிகு மாணிக்கவாசகம், மாண்புமிகு ரோனி லியூ, மாண்புமிகு மானோகரன், மாண்புமிகு Dr. சேவியர் ஜெயக்குமார் ஆகியோரின் நிழற்படங்களும் கண்களில் பட்டது. இந்த மாண்புமிகுகளின் அனுமதி பெற்று உறுதிபடுத்தப்பட்ட பின்னரே இந்த பதாகை அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், அதில் ஒருவர்கூட வராதது நூலின் ஆசிரியருக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்திருக்கக்கூடும். வருகையாளர்கள் மத்தியில் அவர்களின் செய்கை வருத்தத்தை தந்தது மட்டுமின்றி சினமடையவும் செய்ததாகவே உணர்ந்தேன். கல்வி தொடர்புடைய, தன் சொந்த சமுதாயம் கடந்து வந்த சூழல்களை எடுத்துக்கூறும் ஒரு சரித்திர நூலினை மதிக்கும் மாண்பை இழந்தவர்களைத்தானா மாண்புமிகுக்கள் என்று புகழ்பாடுகிறோம்? இவர்களில் மாண்புமிகு மாணிக்கவாசகம் அவர்களுக்கு உடல் நலக் கோளாறு என்று கேள்விப்பட்டேன். மற்றவர்கள் எதை நோக்கி பயணிக்கிறார்கள்? ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தலும், கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதும் தலைமைத்துவ பண்புகளில் ஒரு பகுதிதானே!

விளையும் பயிர் முளையும் போதே தெரியுமாம். இதுபோன்ற தலைவர்களுக்கு சுட்டிக்காட்டி முட்டுக் கொடுத்து வளரும் போதே சரி செய்துவிட வேண்டும். தவறாக வளர்ந்து விருட்சமாகிவிட்டால் அகற்றுவது எவ்வளவு சிரமம் என்று மலேசிய இந்தியர்களுக்கு கடந்த 30 ஆண்டுகள் கொடுத்த அனுபவப் பாடம் ஒன்றே போதுமானது.

சிறந்த சமுதாயம் செய்யும் கடப்பாடு ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது. நிகழ்கால சீறிய + தூரநோக்கு சிந்தனையே நாளைய சிறந்த சமுதாய உருவாக்கத்திற்கு வித்தாகும்.


சிந்திப்போம்! செயல்படுவோம்!







பி.கு : நிழற்படங்கள் தரம் குறைந்திருப்பதற்கும் சற்று தாமதமாக நூல் வெளியீட்டுச் செய்திகளை பதிவேற்றியதற்கும்.... மன்னிப்பு கோருகிறேன்.




பகுதி 2


3. வாழ்விடம்


அட்டைகள் வெப்பநிலை கொண்ட பகுதிகளில் மிகுந்து காணப்படுகின்றன. ஆயினும், அவை சூரிய ஒளியை நேசிப்பதில்லை. நேரடி சூரிய ஒளிக்கதிர்கள் மேனியைத் தழுவாதிருக்கும் பொருட்டு கற்கள், பாறை இடுக்குகள், செடி கொடிகள், வேர்கள் என்று மறைவிடத்தை நாடி வாழ்கின்றன. சுறுங்கச் சொன்னால், அட்டைகள் வெளிச்சம் குறைந்த அல்லது இருள் படர்ந்த இடங்களில் வாழக்கூடியன.



பொதுவாக, வெளிச்சம் குறைந்த அல்லது இருள் படர்ந்த நீர் பகுதிகளில் அட்டைகள் அதிகம் காணப்படும். அட்டைகள் நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை கொண்டன. எனினும், தேங்கி இருக்கும் நீரே அட்டைகளுக்கு உகந்ததாகும். காரணம் ஓடும் நீரில் எதிர்நீச்சல் போடும் ஆற்றல் அவற்றுக்கு இல்லை. ஆழமான நீர்நிலைகளிலும் அட்டைகள் வசிப்பதில்லை. காரணம் தேங்கி இருக்கும் நீரின் மேற்பகுதியில் மட்டுமே சுவாசத்திற்குத் தேவையான பிராணவாயு அதிகம் இருக்கும். குளோரின் அதிகம் கொண்ட நீரிலும் அட்டைகள் வாழாது. நீருக்கு வெளியே வரும் அட்டைகள், தன் உடலின் தோல் பரப்பில் உள்ள சுவாசத் துவாரங்களின் துணைகொண்டு சுவாசிக்கின்றன.


அட்டைகள் சத்தம் கொண்ட சூழ்நிலையை வெறுக்கின்றன. அதிக சத்தம் அட்டைகளின் இனப் பெருக்கத்திற்கும் தடையாக அமையும்.



ஆக மொத்தத்தில், உண்பதையும் இனபெருக்கம் செய்வதையுமே வேலையாகக் கொண்டு பிற உயிர்களை அண்டி வாழும் அட்டைகள் மட்டுமல்ல அவ்வாறான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்த மனிதர்களும் கூனிக் குறுகி, மறைந்து ஒளிந்து வாழ்க்கையை ஓட்ட வேண்டியதாயிருக்கும்.



4. உணவு




அட்டைகளின் முக்கிய உணவு உயிரினங்களின் குருதியே. ஒரு சில நீர் தாவரங்களின் இலைகளையும் அவ்வப்போது உண்ணும் பழக்கம் அட்டைகளுக்கு உண்டு.



உயிரினங்களில் மேலான உயிரினம் என்று மார்தட்டிக் கொள்ளும் மனிதன் உமிழ்நீரைத் துப்பினால் உலகப் போரே வெடித்துவிடும். ஆனால், அற்பமாகக் கருதும் அட்டையின் உமிழ்நீருக்கு இன்று மருத்துவ உலகமே சிவப்பு கம்பளம் விரிக்கின்றது.



அட்டைகளுக்கு மூன்று பல் தொகுதிகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றிலும் நூறு சிறு பற்கள் வீதம் மொத்தம் முன்னூறு பற்கள் இருக்கின்றன. அட்டைகள் இந்தப் பற்களின் துணை கொண்டு மற்ற உயிரினங்களின் தோல் பகுதியை முதலில் கடித்து துவாரமிடுகின்றன. பின்னர், தேக்கி வைத்திருக்கும் உமிழ்நீரை துப்புகின்றன. உமிழ்நீரில் கலந்திருக்கும் Hirudin எனும் Enzime குருதியை எளிதாக உறிவதற்கு ஏற்றவரையில் மேலும் இலகுவாக்குகின்றது.



ஏறக்குறைய 10 நிமிடங்களிலிருந்து 120 நிமிடங்கள் வரை அவை உணவருந்தும். தான் உறிந்த குருதியின் கணம் தாங்காமல் பற்களை விடுவித்துக் கொண்டு அவை கீழே விழுந்துவிடுகின்றன. ஒரு முறை வயிறுமுட்ட குருதியை உறிஞ்சிய அட்டைக்கு அடுத்த ஐந்திலிருந்து ஆறு மாதங்கள் வரை உணவுத் தேவை இருக்காது.


அட்டை வளர்ப்பை தொழிலாகச் செய்ய நினைப்பவர்கள், விலாங்கு மீனையும் மயிரை மீனையும் அட்டைகளுக்கு உணவாகக் கொடுக்கலாம். காரணம், இவ்விரண்டு வகை மீன்களுக்கும் செதில் இல்லை; எளிதில் கிடைக்கக்கூடியது; செலவுகள் குறைவு. உயிரோடு இருக்கின்ற மீன்களை வாங்கி கம்பிக் கூண்டிலிட்டு அட்டை தொட்டிகளில் வைக்கலாம். மீன்கள் வைக்கப்படும் இந்த கம்பிக் கூண்டுகள் சரிபாதி மட்டுமே நீரில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். மீன்களின் உடலில் இருக்கும் குருதி உறிஞ்சப்பட்டுவிட்டால், மீன்களின் உடல் வெளுத்து காணப்படும். குருதி வெளியாக்கப்பட்ட மீன்கள் இறப்பதற்கு முன்னதாக அப்புறப்படுத்தப்பட வெண்டும்.





5. வளர்ப்பு தொட்டிகள்





அட்டைகளை மூன்று வழிமுறைகளில் வளர்க்கலாம்.





1). நீர் தேக்கங்கள்/குளங்கள் - இந்த முறை பெரிய பொருட்செலவில் அதிக எண்ணிக்கையில் (பல ஆயிரம்) அட்டைகளை வளர்ப்பதாகும்.








2). சிமெண்ட் தொட்டிகள் - இந்த முறை குறைந்த பொருட்செலவில் சில ஆயிரம் அட்டைகளை வளர்ப்பதாகும். இந்த சிமெண்ட் தொட்டிகள், வளர்க்கப்படும் அட்டைகள் வெளியில் வராத வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும். சொந்த அல்லது வாடகை நிலங்களில் இந்த முறையை பயன்படுத்தலாம்.







3). நீர் தொட்டிகள் - இந்த முறை மிகக் குறைந்த பொருட்செலவில் சில நூறிலிருந்து சில ஆயிரம் அட்டைகளை வளர்ப்பதாகும். நமது வீடுகளில் நீரை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் அதே கருப்பு நிறம் கொண்ட Poly Tank தான் இந்த தொட்டிகள். ஒவ்வொரு தொட்டிகளிலும் 500-லிருந்து 700 அட்டைகள் வரை வளர்க்கலாம். இது மிகவும் எளிய முறையாதலால் சிறு தொழிலாக அட்டை வளர்ப்பை தொடங்குகின்றவர்களில் பெரும்பான்மையினர் இம்முறையையே பயன்படுத்துகின்றனர். வளர்க்கப்படும் அட்டைகள் வெளியில் 'உல்லாச உலா' செல்லாதவாறு இந்தத் தொட்டிகளின் மேற்பகுதியில் சல்லடைக் கம்பிகள் பொறுத்தப்பட்டிருக்கும்.






தொடரும்....


பி. கு: தயவு கூர்ந்து Enzime, சிமெண்ட், Poly Tank ஆகியவற்றுக்கு சரியான தமிழ்ச் சொல்லை தந்து உதவவும்.



பகுதி 3


6.பயன்பாடு
7.பொருளியல் ஆய்வு
8.எனது கருத்து