6:32 PM | Posted in ,
மு.கு : சற்று நீளமான பதிவுதான். மறுக்காமல் படிக்கவும்.

நாட்டையும் நாட்டின் அரசியலையும் ஆட்டிப் படைக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இத்தகைய சம்பவங்கள் எழும் காலகட்டத்தில் நமது ஊடகங்கள் ஓரிரு நாட்களுக்கு அதனை ஒரு பக்கமாக ஊதிப் பெரிதாக்குவதும் பின்னர் அதனை மறந்து விடுவதும் மலேசிய ஊடகங்களின் வழக்கமான வியாபார நாடகம் என்றால் அது மிகையாகாது.

அதில், நம் தமிழ் அச்சு ஊடகங்கள் நம் சமுதாயத் தொடர்புடைய தகவல்களை அல்லது உண்மை நிலவரங்களை வெளியிடும் முனைப்பு பாராட்டுக்குரியது. என்றாலும், அடுத்த நாளே இந்த நாளிதழ்கள் ஆளும் கட்சியினரின்; ஆதிக்கவாதிகளின் ஒருதலைபட்ச செய்திகளை முன்னுக்குப் பின்னாக அச்சிட்டு, எடுத்துக் கொண்ட நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கும் போக்கு, மலேசியத் தமிழரிடையே தமிழ் நாளிதழ்களை வெறுக்கும் மனப்பான்மையை அதிகரித்திருப்பதும் மறுக்க முடியாத உண்மை.

நாளிதழ் உரிமையாளர்கள் இதற்கு காரணங்கள் பல கூறலாம். அரசின் உருட்டல் மிரட்டல்களுக்கு கட்டுப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று இவர்கள் முகாரி பாடுகின்றார்கள். ஆனால், இனம், மதம், தேசிய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் விளைவிக்காத ஏனைய செய்திகளையும் ஏன் இவர்கள் அச்சிட மறுக்கின்றனர் என்பதுதான் விளங்கவில்லை. மேடையில் அச்சமில்லை.. அச்சமில்லை என்று முழங்கிவிட்டு ஒரு சமுதாயத்திற்கு முதுகெலும்பாக, அறிவுக் கண்களாக விளங்க வேண்டிய சாதனத்தை சாக்கடையிலே மூழ்கடித்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் விழித்துக் கொண்டார்கள்; ஊடகங்கள் இன்னும் எச்சில் சோற்றுக்குத் தவம் கிடக்கின்றன.

ஒரு நிகழ்வையோ அல்லது யாரோ ஒருவர் கூறும் செய்திகளை முழுமையாகவோ அல்லது தணிக்கை செய்து அச்சிடுதல் மட்டும் ஒரு நாளிதழின் கடமையன்று. பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் நாளிதழின் நிலைபாட்டை, ஆலோசனைகளை வாசகர்களுக்கு முன்வைக்க வேண்டும். மலேசியாவைப் பொறுத்தவரை, ஒரு விடயம் குறித்த நாளிதழ்களின் பொறுப்பாசிரியர் குழுவின் நிலைப்பாடு முடிந்த மட்டில் தவிற்க்கப்படுகிறது. பல உண்மைச் சம்பவங்கள் ஓரங்கட்டப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களினால்தான் அச்சு ஊடக வாசகர்கள் மாற்று ஊடகங்களை நாடிச் செல்கின்றனர் எனும் மாபெரும் உண்மையை அவர்கள் இன்னும் உணராதிருப்பது வருத்தமளிக்கிறது.

சரி, குகனின் மரணத்திற்கும் நம் தமிழ் நாளிதழ்களை நான் சாடியதிற்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கின்றீர்களா? தொடர்ந்து படியுங்கள்.

மகிழுந்து (கார்) திருட்டை காரணம் காட்டி குகன் கைது செய்யப்பட்டார் என்பது பொதுவாக மலேசியர்கள் அனைவரும் அறிந்த ஒன்றே. காவல் துறையினர் அறிவித்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு நாட்டிலுள்ள அனைத்து ஊடகங்களும் செய்திகளை தங்களுக்கே உரிய பாணியில் கக்கியிருந்தன. காவலில் வைக்கப்பட்ட குகன், இளைப்பு நோயால் மூச்சடைத்து இறந்துவிட்டதாக உள்துறை அமைச்சர்ர்ர் சேட்டு அமீது அலப்பார் அலந்தார். (அறிவே இல்லாது அபாராமாகப் பேசி பின் வாங்கிக் கட்டிக் கொள்பவர் இவர் என்பது நாம் அறிந்ததுதானே)

குகனுக்கு எந்த நோயும் இல்லை; காவல் துறையும் சேட்டு அமீது அலப்பாரும் பொய்யுரைக்கின்றனர் என்று குகனின் தாயார் ஆவேசப்பட்டார்.


மறுநாள், தேசிய கலவாடல் துறைத் தலைவர் மூசாங் அசான் தனது பங்குக்கு மருத்துவ உலகமே வியக்கும் புதியத் தகவலை வெளியிட்டார். குகன் தாகம் என்று தண்ணீர் கேட்டாராம்; காவல் அதிகாரி தண்ணீர் கொடுத்தாராம்; தண்ணீரைக் குடித்த குகனின் நுரையீறலில் கொஞ்சம் நீர் கோர்த்துக் கொள்ள, மூச்சடைத்து மரணம் அடைந்தாராம் ( இனி நீர் அருந்தும் போது கவனமுடன் இருக்கவும். உங்களுக்கும் அடிக்கடி தண்ணீர் மாட்டிக்கொள்ளப் போகிறது- என்னக் கொடுமை சாமி இது).

இணையத்திலும் மின் மடல்களிலும் குகனின் உடலில் காணப்பட்ட காயங்கள் கொண்ட நிழற்படங்கள் காட்டுத் தீயாகப் பரவின. மக்கள் வெகுண்டெழுந்தனர். மாற்றுக் கட்சியினரும் இதை ஓர் இனப் பிரச்னை அல்ல, இது தேசிய பிரச்னை என்று முழங்கினர்.

திடீரென, தேசிய சட்ட ஒழுங்கீனத் தலைவர் கனி பெட்ட தையல் முதல் முறையாக நாயகன் வேடம் பூண்டார். குகனின் மரணம் ஒரு கொலை என்று வகைபடுத்தப்பட்டது.

காவல் துறை, அரசினரின் மறைமுக தடங்கல்களைத் தகர்த்து, குகனின் குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கு ஏற்ப மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் (அரசுக்கு அடங்கிய இடம்) இரண்டாவது சவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த புதன் கிழமையன்று (28/01/2009) குகனின் இறுதி ஊர்வலம் பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 அளவில் பூச்சோங் 14-வது மைல் இந்தியர் இடுகாட்டில் முடிந்ததும் நீங்கள் அறிந்த ஒன்றே.



நானும் குகனின் இறுதி ஊர்வலத்தில் இணைந்து கொண்டேன். முற்பகல் 11.00 மணி அளவில் மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையைச் சென்றடைந்த போது ஏறக்குறைய 20 பேர் மட்டுமே இறுதி ஊர்வலதிற்காக காத்திருந்தனர். ஆனால், காவல் துறையினர், கலகத் தொடுப்பு துறையினர் (FRU), சாலை ஒழுங்கீன காவலர்கள் (Trafic) மற்றும் சீருடை தரிக்காத தருதலைகள் என 1000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையின் முன் மோப்பமிட்டுக் கொண்டிருந்தனர்.

காலை 11.30. திடீரென்று ஓர் அதிகாரி எங்கள் முன் தோன்றி, 10 வினாடிகளில் எங்களைக் கலைந்து செல்லும்படி உத்தரவிட்டார். நாங்கள் குகனின் இறுதி ஊர்வலத்திற்கு வந்திருப்பதாகக் கூறினோம். எங்கள் பேச்சு செவிடன் காதில் ஊதிய சங்குதான். ஆரஞ்சு சட்டையை அணிந்தவர்களை முதலில் பிடிக்க உத்தரவு பிரப்பிக்கப்பட்டது. "இன்ராப்பைத்தானே தடை செய்திருக்கிறீர்கள் மக்கள் சக்தியை தடை செய்யவில்லையே" என்றோம். "மேலிடத்து உத்தரவு; ஆரஞ்சு சட்டை அணிந்திருபவர்களை கைது செய்வோம்" என்று ஆணவத்தோடு கத்தினான் ஒருவன். நால்வர் தடுத்து வைக்கப்பட்டனர். (வாசகர்களே உங்கள் சீன நண்பர்களிடம் சீனப் புத்தாண்டுக்கு ஆரஞ்சு பழத்தை வாங்கி உண்ண வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள். அவர்களும் கைது செய்யப்படலாம்)

சற்று நேரத்தில் மாற்றுக் கட்சி அரசியல் தலைவர்களைக் கண்டதும் ஏனையோரை பிடிக்கும் படலம் நிறுத்தப்பட்டது. நான் இம்முறையும் தப்பித்தேன்.

அண்ணன் தனேந்திரன் வந்து அனுமதி கேட்டபோது அதிகாரி ஒருவனால் தள்ளிவிடப்பட்டார்; பின்னர் அவரும் அவருக்கு உதவிய பெரியவர் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டனர்.


(மேலே குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களின் போது நம் தமிழ் செய்தி சேகரிப்பாளர்களோடு மற்ற மொழி செய்தி சேகரிப்பாளர்களும் அருகில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது)



பிற்பகல் 1.30 மணியளவில் குகனின் உடல் மருத்துவமனையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட போது 2000-கும் மேற்பட்டோர் குழுமியிருந்தனர். கலகப் படையினரின் பய உணர்வு உச்சிக்குச் சென்றது; விளைவு எங்கள் தலை உச்சியில் பெரிய பட்டாம் பூச்சி (அதாங்க எலிகப்டர்).

குகனின் சவம் சுபாங் செயாவை கடக்கும் போது 3000 மலேசியர்கள் (இனம், மதம் பாராது) திரண்டிருந்தனர். இடுகாட்டை அடைந்த போது அங்கும் 10 வண்டிகளில் கலகத் தொடுப்பு துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால், அப்போது வானம் சற்று அழுததால் எல்லா அதிகாரிகளும் வண்டிகளுக்குள்ளே 'அடக்கமானார்கள்'.



குகனின் உடல் மரியாதை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இனி எந்த மனிதனுக்கும் காவல் துறையினரின் அத்துமீறிய மிருகத்தனத்தால் மரணம் நிகழக்கூடாது என்பதை நாம் தான் உறுதி செய்யவேண்டும்.

குகனின் மரணம் பல ஐயங்களை எழுப்பியுள்ளது.

1. ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் கீழ் மாதக் கட்டணம் செலுத்தப்படாத கார்களை பறிமுதல் செய்யும் தொழிலை செய்துவந்த தன் மாமாவிற்கு உதவியாளராக குகன் பணி புரிந்துள்ளார். கைதுசெய்யப்படுவதற்கு முன்பு, குகன் ஒரு காவல்த்துறை அதிகாரியின் சொந்தக் காரை பறிமுதல் செய்வதற்கு முனைந்த பொழுது, அந்த குறிப்பிட்ட காவல்த்துறை அதிகாரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாம். அவ்வேளையில், குகன் அக்காரை பறிமுதல் செய்வது தன்னுடைய கடமை என வாதிடுகையில், குகனின் மறுமொழியால் ஆத்திரம் அடைந்த அக்காவல்த்துறை அதிகாரி, குகனைக் கைது செய்து தடுப்புக் காவலில் துன்புறுத்தி இறுதியில் அவரின் அகால மரணத்திற்கும் காரணமாகியுள்ளார். (நன்றி : ஓலைச்சுவடி)

2. குகன் சொகுசு மகிழுந்து கடத்தலில் ஈடுபட்டதால் விசாரனைக்காகத் தடுக்கப்பட்டதாகக் காவல் துறையினர் கூறுகின்றனர். சில கிடங்குகள் அடையாளம் காணப்பட்டு மகிழுந்துகள் மீட்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை கிடங்குகளின் உரிமையாளர்களோ அல்லது தொடர்புடையவர்களோ யாரும் கைது செய்யப்படவில்லை. ஒரு வேளை, இதெல்லாம் பூமியிலிருந்து தானாக முளைத்த கிடங்குகளாக இருக்குமோ?

3. அப்படி காவல் துறையினரின் கூற்று உண்மையெனில் குகன் முழு ஒத்துழைப்பை வழங்கியிருக்கின்றார் என்பது தெளிவாகின்றதல்லவா? பின் ஏன் குகனுக்கு மரணம்? காவல் துறை அல்லது ஆளும் கட்சியின் பெரும் புள்ளிகளைக் காப்பாற்றும் பொருட்டு குகன் பலியிடப்பட்டிருகலாம் என்ற எண்ணம் வலுக்கிறது.


4. திருடப்பட்டதாகக் கூறும் மகிழுந்துகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை காப்புறுதி முகவர்களோ-அதிகாரிகளோ, JPJ அதிகாரிகளோ யாரும் தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.


5. உள்துறை அமைச்சர்ர்ர் சேட்டு அமீது அலப்பார், குற்றவாளிகளை நாயகர்களாக மாற்ற வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். சட்டத்தின் முன் நிறுத்தப்படாத பட்சத்தில் ஒருவர் குற்றவாளி அல்ல நிரபராதியே என்று இந்த மொட்டைத் தலையனுக்குத் தெரியாமல் போனது விந்தையாக இருக்கிறது. இவர் யாரைக் காப்பாற்ற முனைகிறார்?( ஓ.. உள்ளே இருந்தால்தானே வெளியில் ஏதும் முளைத்திட... ஏன் பாலைவனத்தில் புல் பூண்டுகள் முளைப்பதில்லை என்பதை இவர் தலையோடு ஒப்பிட்டுப் பாருங்கள்)

ஒட்டு மொத்தமாக காவல் துறையையோ அல்லது அரசாங்கத்தையோ குறை கூறவில்லை. சில மனித மிருகங்களின் கைப்பாவையாக மக்கள் காவலர்கள் மாறக்கூடாது என்பதே நமது எண்ணம்.

குகன் நல்லவனா கெட்டவனா என்ற கேள்வி தேவையில்லை. கெட்டவனாக இருந்தால் சட்டப்படி தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். காவல் துறையினர் சட்டத்துறையின் வேலையைப் பார்க்கத் தேவையில்லை. சட்டத் துறை மதிக்கப்பட வேண்டும். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாகும் நாள் வரவேண்டும்; நாட்டாமை தீர்ப்புகள் ஒடுக்கப்பட வேண்டும். வெளிப்படையான, நேர்த்தியான விசாரணைகள் மட்டுமே அரசு, காவல் துறை மற்றும் சட்டத் துறையின் மேல் படிந்த கலங்கத்தைப் போக்கும்.

ஊடகங்கள் நுணிப்புல்லை மேய்வதை விடுத்து சற்று தைரியமாக உண்மைச் செய்திகளை வெளியிட வேண்டும். இணையம், வலைப்பதிவர்களின் வருகையால் வாசகர்களை இழந்துவரும் அச்சு ஊடகத்தார், வாசகர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். பசித்தவனுக்கு உணவுதான் தேவை; துணி மணிகள் அல்ல. வாசகர்கள் ஒட்டு மொத்தமாக இந்த ஊடகங்களை புறக்கணிப்பதற்கு முன் விழித்துக் கொள்வார்களா அதன் உரிமையாளர்கள்?
2:13 AM | Posted in

பொங்கலோ பொங்கல்.. பொங்கலோ பொங்கல்..


மின் அஞ்சலை முடுக்கினால் பொங்கல் வாழ்த்துகள் வண்ண வண்ணக் காட்சிகளாக முண்டியடித்து வரிசையில் நிற்கின்றன. கைத்தொலைபேசியின் அலரலும் ஓய்ந்தபாடில்லை. எங்கும் பொங்கல் அலைகள். பொங்கல், பானையில் பொங்கும் முன்னே மனதில் பொங்கி வழிகிறது. அதிலும் குறிப்பாக ஆங்கில ஆண்டு 2009-ல் வரும் பொங்கலுக்கு மற்றுமொரு தனிச் சிறப்பும் உண்டு. இவ்வாண்டு தை முதல் நாள், " தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் திருநாள்" எனும் முழக்கத்தோடு நம்மை அரவணைக்க வருகிறது.



தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரின் தலைமையில், 1931-ஆம் ஆண்டில், ஐநூற்றுக்கும் மேற்பட்ட நற்றமிழ் அறிஞர் பொருமக்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி, தை மாதத்தின் முதல் நாளே தமிழ் ஆண்டின் பிறப்பு என்று ஒருசேர மொழிந்தனர். அதோடு, தமிழ் ஆண்டை தமிழ்த்தாயின் தலைமகன் திருவள்ளுவரின் பொயரால் அழைக்கப்பட வேண்டும் என்றும் முழங்கினர். ஏசு கிருத்து பிறப்பிற்கு 31 ஆண்டுகளுக்கு முன் அய்யன் திருவள்ளுவர் பிறந்திருக்கக்கூடும் என்றும் பல ஆதாரங்களின் துணை கொண்டு இறுதியிட்டனர். இங்கே, சிலருக்குக் கேள்விகள் எழக்கூடும்; அறிவியல் ஆதாரங்கள், தடையங்கள் இல்லாத சூழலில் இந்த முடிவை ஏற்றல் தகுமா? அறிவுடமையாகுமா? என்று. கிருத்துவ மதத்தினர் அய்யன் ஏசுவையும், இசுலாமியர் அன்னல் நபிகள் நாயகத்தையும், பொளத்தர்கள் அய்யன் புத்தரையும் அடிப்படையாகக் கொண்டு அவர்களது ஆண்டை கணக்கிடுகின்றனர். இந்தப் பொருமக்கள் இற்றை நாளில் பிறந்தார் என்பதை மெய்ப்பிக்கும் சான்றிதழ்கள் கொண்டா அவரவர் சமயங்களுக்கு அந்தச் சமயப் பெரியோர்களின் பெயர்களில் ஆண்டுகள் நடைமுறையில் இருக்கின்றன? மற்றுமொரு வழக்கத்தையும் நாம் இங்கே கவனித்தல் நலம் பயக்கும். நம் முன்னோர்கள் சமகால நிகழ்வுகளை வரலாற்றுப் பதிவுகளாகத் தொடுத்து வைக்கும் வழக்கம் இன்றி வாழ்ந்திருக்கின்றனர். ஆனால், தமிழர்களின் சமகால நிகழ்வுகளை கவிதைகள், செய்யுள்கள் மற்றும் பாடல்கள் வாயிலாகப் பதிவு செய்து விட்டுச் சென்றிருக்கின்றனர் என்பதையும் நாம் மறக்கலாகாது. இலக்கணம், மருத்துவம், வேளாண்மை, சரித்திரம் என்று எல்லாவகை அறிவுடமை சொத்துக்களெல்லாம் கவிதைக்குள்ளும் பாடல்களுக்குள்ளும் அடக்கம். ஆகவே, அன்று ஐநூற்றுக்கும் மேற்பட்ட நற்றமிழ் அறிஞர் பொருமக்கள் விரிவான ஆய்விற்குப் பின்னரே தங்கள் முடிவுகளை அறிவித்திருக்கக்கூடும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.


அரை நூற்றாண்டு கடந்த பின்னரே 1971ல் கலைஞர் ஆட்சியில் திருவள்ளுவராண்டு முறை அரசு நாட்குறிப்பில் இடம் பெற்றது. புரட்சித் தலைவர் ராமச்சந்திரன் அவர்களால் 1981-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் அனைத்து அலுவல்களிலும் திருவள்ளுவராண்டு கட்டாயமாக்கப்பட்டது. கடந்த ஆண்டில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக நடைமுறைப்படுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசு சாசனத்த்தில் சட்டமாக்கப்பட்டது. அதன் காரணமாகவே, இந்த ஆண்டு தைப் பொங்கல் மேலும் சிறப்பு பெற்றிருக்கின்றது. இந்த ஆண்டு தைப் பொங்கல் மேலும் மகிழ்வைத் தந்தாலும், முழுக்க முழுக்கத் தமிழர்களே வாழும் தமிழ்த்திரு மண்ணில் மொழி நலம் பேனும் சட்டம் நடைமுறைப்படுத்த 78 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றதை நினைக்கும்போது மனம் சற்றே சஞ்சலப்படுகின்றது.


மலேசியாவைப் பொறுத்தமட்டில், தைப் பொங்கலைக் கொண்டாடும் பெரும் பகுதி தமிழர்கள், இத்திருநாளை மூன்றாம் தர பண்டிகையாகத்தான் கொண்டாடுகின்றார்கள். மலேசிய மண்ணில் வாழும் இந்திய வழித் தோன்றல்களில் 80 விழுக்காட்டினர் தமிழர்களாக இருந்தும், ஆரிய வழி தீபத் திருநாளுக்கு பொது விடுப்பு கொடுக்கப்பட்டதும், பொங்கல் திருநாளுக்கு பொது விடுப்பு மறுக்கப்பட்டதும்தான் காரணம் எனத் தோன்றுகிறது. மலேசிய வாழ் தமிழர்களின் வாழ்க்கையில் தீபாவளி நயவஞ்சகமாகத் தினிக்கப்பட்டதை முதலில் நாம் உணர வேண்டும். காரணம், மலேசிய சட்டங்கள் இயற்றப்பட்ட காலக்கட்டத்தில், தமிழர்கள் அல்லாதவர்களே அரசியலமைப்பு - சட்ட ஆலோசனைக் குழுக்களில் இடம் பெற்றிருந்தனர். அதனால், அவர்களின் கலாச்சாரத்தை வளர்க்கும் முயற்சியிலேயே முழு கவனத்தையும் செலுத்தினார்கள். தமிழர்கள், தமிழர் கலை, கலாச்சாரம், மரபுகள் நாசுக்காக அழிக்கப்படுகின்றது என்பதைக்கூட உணராதவர்களாக, எது தமிழர் கலை, கலாச்சாரம் என்பதையும் அறியாதவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும்; மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ச் சமுதாயம் பாமறச் சமுதாயமாக, கல்வியறிவு குன்றிய சமுதாயமாக, உரிமைகள் மறுக்கப்பட்ட சமுதாயமாக இருந்த காரணத்தால் தொலைத்த அடையாளங்கள் அதிகம். ஆனால், இன்றைய சூழ்நிலை வேறு. இழந்தவற்றைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதில் பலன் இல்லை; மீட்டெடுக்கும் கடமையை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு. துனிந்து நில்; தொடர்ந்து செல்; தோல்வி கிடையாது தமிழா!!!





தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்பத்தன்று நூறன்று பன்னூ றன்றுபல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்நித்திரையில் இருக்கும் தமிழா!சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு - (புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்)
��
10:26 PM | Posted in ,

மண்ணில் மூத்த குடியென முகிழ்த்தோம்;

மாண்பில் உயர்ந்த இனமென மகிழ்ந்தோம்;

விண்ணில் உலவும் மீன்களை ஆய்ந்தோம்;

வையகம் போற்றும் நாகரீகம் சமைத்தோம்;



தெருக்கள் தோறும் கோவில்கள் அமைத்தோம்;

தரணியையே அன்று அடக்கி ஆண்டோம்;

பார்புகழ் காவியங்கள் ஈன்றோம் என்றோம்;

பார்வையில் பட்ட யாவையும் எம்மாலென்றோம்.



நேற்றைய பழமைகள் ஏட்டிலே உறங்கட்டும்;

நாளைய புதுமைகள் செயலிலே துவங்கட்டும்;

பீற்றும் தலைமுறை நாளை தேவையில்லை;

பிறக்கும் தமிழாண்டிலே புதுஉறுதி கொள்வோம்.



சரிந்த சரித்திரம் படிப்பினை ஊட்டட்டும்;

சோர்ந்த கனவுகள் துளிர்விட்டு மலரட்டும்;

செரிந்த சிந்தனைகள் சீற்றம் பெறட்டும்;

செல்லரித்த சமுதாயம் மீண்டும் பொங்கட்டும்.



நழுவவிட்ட உரிமைகளை ஒருசேர மீட்டெடுக்க

நயவஞ்சகப் புல்லுருவிகளை இனங்கண்டு களையெடுக்க

பலம்தோயும் முன்னே குரல்வலை நெரிப்பார்தன்னை

போகிக்கு உணவளித்து குமுகாயம் காத்திடுவோம்.



பொங்கல், உழுகின்ற சமுதாய உடமையன்று!

பசிதீர உழைக்கும் மானிடச் சொத்தென்று,

பொங்குக பொங்குக உளமாறப் பொங்குக!!

பண்பற்றச் செயல்களை தீயிட்டுப் பொங்குக!!!

உலகத் தமிழர் அனைவருக்கும் எமது தமிழ்ப் புத்தாண்டு / தைப் பொங்கல் நல்வாழ்த்துகள்!!!