சிங்கம் ஒன்று புறப்பட்டதே!!!!!!






சூலை 19, 2009, மலேசிய இந்தியர்களின் எழுச்சிக் குரலாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் திரு. உதயகுமார் அவர்கள் அதிமுக்கிய அறிவிப்பு ஒன்றைச் செய்யத் தயார் நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றது.


சிறைவாசமும் தடுப்புக் காவல் நிலையங்களும் பல அறிஞர்களையும், சிந்தனையாளர்களையும், அரசியல் சானக்கியர்களையும் உருவாக்கி இருப்பது சரித்திரம் உரைக்கும் உண்மை. 514 நாட்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் எனப்படும் மலேசிய அம்னோ ஆதிக்க அரசிற்கு எதிரான அரசியல் எதிர்ப்பு ஒடுக்கு முறை மற்றும் அடிப்படை மனித உரிமைகளுக்குப் புறம்பான காட்டுமிராண்டி சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்டவர் உதயகுமார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் மனித உரிமைக்காகவே தன் வாழ்க்கையை தாரைவார்த்தவர். இதன் காரணமாகவே பல முறை கைது செய்யப்பட்டார் என்பதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டிய செய்தியாகும்.


இந்த நிகழ்வில் திரு. உதயா அவர்கள், மலேசிய மனித உரிமை கட்சியைத் தொடங்கும் அறிவிப்பைச் செய்யக்கூடும் என்றும் நம்பப்படுகிறது. அதோடு, அவர் தடுப்புக் காவலில் வதைக்கப்பட்டபோது வார்த்தெடுத்த நூல் ஒன்றையும் வெளியிடக்கூடும் என்றும் அறியப்படுகிறது.


மலேசிய இந்தியர்களுக்கென்று மேலும் ஒரு அரசியல் கட்சி தேவையா என்ற கேள்வியும் இங்கே எழக்கூடும். திரு. உதயாவின் இந்த அரசியல் கட்சிக்கு என் ஆதரவை வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டேன். காரணம், மலேசிய இந்தியர்களுக்கென்று தொடங்கப்பட்டுள்ள அனைத்து கட்சிகளும் அம்னோ/பாரிசானின் காலை நக்கி வாழும் கட்சிகளாகவே தங்களது பாதையை அமைத்துக் கொண்டுள்ளன. ஒரு டீசல் வண்டியை (நான் சாமி சத்தியமா சாமியை சொல்லலேங்கோ) வைத்துக் கொண்டு நமக்குள் விரிசல்களை ஏற்படுத்தி பலவீனப்படுத்தும் நுண்அரசியல் தந்த்திரத்தை இந்த அம்னோ அரசு வெற்றிகரமாக அரங்கேற்றி வருவதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.


இந்த நிகழ்ச்சிக்கு இந்தியர்கள் எல்லோரும் நடுநிலையோடு வந்து கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். திரு. உதயா அவர்களின் உரையை முழுமையாகக் கேட்டப் பின் நீங்களும் ஒரு முடிவுக்கு வரலாமே! சிந்திப்போம்; செயல்படுவோம். சரித்திர ஏடுகள் நம்மைச் சுமக்கக் காத்திருக்கின்றன. திரண்டு வாருங்கள்.