10:26 PM | Posted in ,

மண்ணில் மூத்த குடியென முகிழ்த்தோம்;

மாண்பில் உயர்ந்த இனமென மகிழ்ந்தோம்;

விண்ணில் உலவும் மீன்களை ஆய்ந்தோம்;

வையகம் போற்றும் நாகரீகம் சமைத்தோம்;



தெருக்கள் தோறும் கோவில்கள் அமைத்தோம்;

தரணியையே அன்று அடக்கி ஆண்டோம்;

பார்புகழ் காவியங்கள் ஈன்றோம் என்றோம்;

பார்வையில் பட்ட யாவையும் எம்மாலென்றோம்.



நேற்றைய பழமைகள் ஏட்டிலே உறங்கட்டும்;

நாளைய புதுமைகள் செயலிலே துவங்கட்டும்;

பீற்றும் தலைமுறை நாளை தேவையில்லை;

பிறக்கும் தமிழாண்டிலே புதுஉறுதி கொள்வோம்.



சரிந்த சரித்திரம் படிப்பினை ஊட்டட்டும்;

சோர்ந்த கனவுகள் துளிர்விட்டு மலரட்டும்;

செரிந்த சிந்தனைகள் சீற்றம் பெறட்டும்;

செல்லரித்த சமுதாயம் மீண்டும் பொங்கட்டும்.



நழுவவிட்ட உரிமைகளை ஒருசேர மீட்டெடுக்க

நயவஞ்சகப் புல்லுருவிகளை இனங்கண்டு களையெடுக்க

பலம்தோயும் முன்னே குரல்வலை நெரிப்பார்தன்னை

போகிக்கு உணவளித்து குமுகாயம் காத்திடுவோம்.



பொங்கல், உழுகின்ற சமுதாய உடமையன்று!

பசிதீர உழைக்கும் மானிடச் சொத்தென்று,

பொங்குக பொங்குக உளமாறப் பொங்குக!!

பண்பற்றச் செயல்களை தீயிட்டுப் பொங்குக!!!

உலகத் தமிழர் அனைவருக்கும் எமது தமிழ்ப் புத்தாண்டு / தைப் பொங்கல் நல்வாழ்த்துகள்!!!