சிங்கம் ஒன்று புறப்பட்டதே!!!!!!


சூலை 19, 2009, மலேசிய இந்தியர்களின் எழுச்சிக் குரலாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் திரு. உதயகுமார் அவர்கள் அதிமுக்கிய அறிவிப்பு ஒன்றைச் செய்யத் தயார் நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றது.


சிறைவாசமும் தடுப்புக் காவல் நிலையங்களும் பல அறிஞர்களையும், சிந்தனையாளர்களையும், அரசியல் சானக்கியர்களையும் உருவாக்கி இருப்பது சரித்திரம் உரைக்கும் உண்மை. 514 நாட்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் எனப்படும் மலேசிய அம்னோ ஆதிக்க அரசிற்கு எதிரான அரசியல் எதிர்ப்பு ஒடுக்கு முறை மற்றும் அடிப்படை மனித உரிமைகளுக்குப் புறம்பான காட்டுமிராண்டி சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்டவர் உதயகுமார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் மனித உரிமைக்காகவே தன் வாழ்க்கையை தாரைவார்த்தவர். இதன் காரணமாகவே பல முறை கைது செய்யப்பட்டார் என்பதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டிய செய்தியாகும்.


இந்த நிகழ்வில் திரு. உதயா அவர்கள், மலேசிய மனித உரிமை கட்சியைத் தொடங்கும் அறிவிப்பைச் செய்யக்கூடும் என்றும் நம்பப்படுகிறது. அதோடு, அவர் தடுப்புக் காவலில் வதைக்கப்பட்டபோது வார்த்தெடுத்த நூல் ஒன்றையும் வெளியிடக்கூடும் என்றும் அறியப்படுகிறது.


மலேசிய இந்தியர்களுக்கென்று மேலும் ஒரு அரசியல் கட்சி தேவையா என்ற கேள்வியும் இங்கே எழக்கூடும். திரு. உதயாவின் இந்த அரசியல் கட்சிக்கு என் ஆதரவை வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டேன். காரணம், மலேசிய இந்தியர்களுக்கென்று தொடங்கப்பட்டுள்ள அனைத்து கட்சிகளும் அம்னோ/பாரிசானின் காலை நக்கி வாழும் கட்சிகளாகவே தங்களது பாதையை அமைத்துக் கொண்டுள்ளன. ஒரு டீசல் வண்டியை (நான் சாமி சத்தியமா சாமியை சொல்லலேங்கோ) வைத்துக் கொண்டு நமக்குள் விரிசல்களை ஏற்படுத்தி பலவீனப்படுத்தும் நுண்அரசியல் தந்த்திரத்தை இந்த அம்னோ அரசு வெற்றிகரமாக அரங்கேற்றி வருவதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.


இந்த நிகழ்ச்சிக்கு இந்தியர்கள் எல்லோரும் நடுநிலையோடு வந்து கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். திரு. உதயா அவர்களின் உரையை முழுமையாகக் கேட்டப் பின் நீங்களும் ஒரு முடிவுக்கு வரலாமே! சிந்திப்போம்; செயல்படுவோம். சரித்திர ஏடுகள் நம்மைச் சுமக்கக் காத்திருக்கின்றன. திரண்டு வாருங்கள்.


5:42 PM | Posted in ,
கடந்த இரண்டு மாதங்களாக அடைக்காக்கச் சென்றிருந்த இந்த மாடப்புறா இன்றிலிருந்து மீண்டும் சிறகடிக்கத் தொடங்குகிறது (இதைச் சொல்வதற்கு வளவளவென்று நீண்ட பதிவையா எழுதனும்?).
தமிழீழ விடுதலைப்போரில் உயிர்நீத்த தமிழ் மக்களுக்கும், தமிழீழ மண்ணில் வீர வித்தாக விதைக்கப்பட்டிருக்கும் விடுதலைப்போரளிகளுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்களையும் சோகங்களையும் பகிர்ந்து கொள்ளவும், இலங்கை அரசின் இன அழிப்பைக் கண்டிக்கவும் நாளை 24-05-2009 காலை 10.00 - 1.00 மணிவரை பத்து மலையில் அலையென திரள்வோம். மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு சார்பற்ற பொது இயக்கங்களின் ஆதரவுடன் இந்த ஒன்றுகூடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துணிந்து வாருங்கள்; குடும்பத்தோடு வாருங்கள்; நமது தார்மீக ஆதரவை போரில் பாதிக்கப்பட்டு அவதியுறும் மக்களுக்கு காட்டும் பொருட்டு திரண்டு வாருங்கள்.

மலேசிய நாட்டு காவல்துறையினரின் அச்சுறுத்தல்களும் கயவர்களால் கட்டவிழ்க்கப்பட்ட வதந்திகள் அதிகம் பரவலாம். இந்நாட்டு காவல்துறை என்றுதான் நடுநிலையாக நடந்து கொண்டிருக்கிறது? அச்சுறுத்தல்களை களைவது விடுத்து அச்சுறுத்தல்களை பரப்பிவிடுவதே கடந்த காலங்களில் அவர்களின் சாதனைகளாக நாம் பார்த்திருக்கிறோம். இம்முறையாவது வெந்த புண்ணில் வேலைப் பாச்சமாட்டார்கள் என நம்புவோம்.

வாருங்கள்; நம் உறவுகள் உடலறுந்து, உடை இழந்து, உணவிழந்து, உறக்கம் இழந்து தவிக்கின்றது. உங்களுக்கும் இது நேரலாம். அரசியல் வேற்றுமைகளை புறந்தள்ளுங்கள்; ஒன்றிணைந்து குரல் கொடுங்கள்.


SUNDAY 24 MAY 2OO9 - BATU CAVES - TIME 10.00 AM TO 1.00 PM


மலேசிய எழுத்தாளர் திரு. சீ. அருண் அவர்கள் எழுதிய 'சயாம்-பர்மா மரண இரயில்பாதை - மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு' என்ற நூல் அண்மையில் கிள்ளான் ஸ்ரீ சுந்ரராஜ பெருமாள் ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. கிள்ளான் செம்பருத்தி மாதிகை குழுவினரின் ஏற்பாட்டில் நடந்தேறிய இந்த நூல் வெளியீட்டில் ஏறக்குறைய 250 தமிழ் ஆர்வளர்கள் வருகை தந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த நூல் வெளியீட்டு நிகழ்வை ஓம்ஸ் குழுமத்தின் நிர்வாக தலைமை இயக்குனர் திரு. ஓம்ஸ். தியாகராஜன் அவர்களின் தலைமை ஏற்று சிறப்பித்தார். டான் ஸ்ரீ குமரன், உயர்திரு முத்தையா, உயர்திரு கலைமணி, செம்பருத்தி மாதிகையின் ஆசிரியர் உயர்திரு க.ஆறுமுகம், மலேசியா இன்று வலைப்பதிவாசிரியர் உயர்திரு. ஜி.பி. காத்தையா, கிள்ளான் செம்பருத்தி வாசகர் வட்டத் தலைவர் திரு. கோவிந்தராசு, கவிஞர் பொன்.நாவலன், கவிஞர் பங்சார் அண்ணாமலை, எழுத்தாளர் திரு. ந.வரதராசு, கிள்ளான் ஸ்ரீ சுந்தரராச பெருமாள் ஆலயத் தலைவர் திரு. சி.த. ஆனந்தகிருட்ணன் ஆகிய வட்டார பிரமுகர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி பிற்பகல் 3.00 மணிக்கே தொடங்கிற்று. திரு. கோவிந்தராசு வரவேற்புரை வழங்கினார். கவிஞர் பொன்.நாவலன் அவர்களும் கவிஞர் பங்சார் அண்ணாமலை அவர்களும் கவிதை விருந்து படைத்தனர்.

முதல் சிறப்புரையாக ஐயா காத்தையா அவர்களின் உரை அமைந்தது. ஐயா அவர்களின் பதிவுகள் எவ்வளவு சூடாக இருக்குமோ அது போலவே அவரது உரையும் இருந்தது. நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை தமது ஆவேசப் பேச்சினால் சிந்திக்கவும் செய்தார். மலேசிய நாட்டின் வளர்ச்சிக்கு தமிழர்களின் அளப்பரிய பங்கு நாளுக்கு நாள் சிதைக்கப்பட்டும்; மறக்கப்பட்டும்; மறைக்கப்பட்டும் வருகின்றது. இதற்கு இந்த நாட்டில் இதுவரை எந்த குறிப்பிடும்படியான நிகழ்வுகளையும் நாம் ஆவணப்படுத்தி வைக்காததுவே காரணம் என்றார். இந்நாடு நமது சரித்திரத்தையே மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் நாளைய தலைமுறையினருக்குத் தவறான, நம்மை மாசுபடுத்தும், சிறுமைபடுத்தும் செய்திகளே தகவல் சாதனங்கள் மூலமும் கல்வி திட்டத்தின் மூலமும் ஊட்டிவிடப்படும் என்று தனது ஆதங்கங்களை முன்வைத்துப் பேசினார்.

இரண்டாவது சிறப்புரையை புக்கிட் மெலாவாத்தி சட்ட மன்ற உறுப்பினர் உயர்திரு முத்தையா வழங்கினார். அவரைத் தொடர்ந்து பேசிய ஸ்ரீ சுந்தரராச பெருமாள் ஆலயத் தலைவர் திரு. சி.த. ஆனந்தகிருட்ணன் அவர்கள், ஆலயங்கள் இறை காரியங்களை மட்டுமே செய்து கொண்டிருக்காமல் மக்கள் ஒன்றுகூடும் இடங்களாக மாறவேண்டும் என்றார். அண்மைய காலமாக இந்த ஆலயத்தில் பல நூல் வெளியீடுகள் நடைபெற்று வருவதையும் சுட்டிக் காட்டினார்.

நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது செம்பருத்தி மாதிகையின் ஆசிரியர் உயர்திரு க.ஆறுமுகம் அவர்களின் சிறப்புரை. அவரது உரையில் இடம் பெற்ற ஒரு கருத்தை மட்டும் இங்கே முன்வைக்கிறேன். 1786 ஆம் ஆண்டு முதல் 1957 ஆண்டுவரை அன்றைய மலாயாவிற்கு வந்த மொத்த இந்தியர்களின் எண்ணிக்கை 42 இலட்சம். பல சூழ்நிலைகளின் காரணமாக மீண்டும் இந்தியா திரும்பியவர்களின் எண்ணிக்கை 30 இலட்சம். 1957 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியர்களின் எண்ணிக்கை 8 இலட்சமே இருந்திருக்கின்றது. ஆனால், இதில் 62 விழுக்காட்டினர் (ஏறக்குறைய 3 இலட்சம்) மலாயா மண்ணில் பிறந்தவர்கள். அப்படி என்றால், இந்தியாவிற்குத் திரும்பாமல் மலாயாவிலே தங்கிய 12 இலட்சத்தில் 1957 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது உயிரோடு இருந்தவர்கள் 5 இலட்சம் மட்டுமே. மீதமுள்ள 8 இலட்சம் மூதாதையர்களை இந்த மண்ணில் புதைத்து இன்றைய மலேசியாவை வார்த்தெடுத்திருக்கின்றோம் என்ற மிகப் பெரிய உண்மையைக் கூறிய போது வருகையாளர்கள் அனைவரும் திகைத்துப் போனார்கள். இந்த மாபெரும் உயிர் இழப்புகளுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் தலையாய ஒன்றுதான் இந்த பர்மா-சயாம் மரண இருப்புப்பாதை கட்டுமானப்பணி என்று நீண்ட விரிந்த உரையை வழங்கி சபையோரை சிந்திக்கும்படி செய்து விடைபெற்றார்.

அவரைத் தொடர்ந்து உயர்திரு கலைமணி அவர்கள் நூல் ஆய்வினை செய்தார். வரலாற்று தவறுகள் அல்லது பிழைகள் தொடராமல் இருக்க அவரவர் வாழ்க்கையை ஆவணப்படுத்துமாறு தமது நூல் ஆய்வின் ஊடே கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, ஓம்ஸ் குழுமத்தின் நிர்வாக தலைமை இயக்குனர் திரு. ஓம்ஸ். தியாகராஜன் அவர்கள் தலைமையுரை ஆற்றி நூலினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

இறுதியில் நூலின் ஆசிரியர் திரு. அருண் அவர்கள் ஏற்புரை வழங்கினார். இந்த நூலானது ஐந்தாண்டுகால கடும் உழைப்பின் பயன் என்றும் தெரிவித்தார். இந்த நூல் உதயமாக தன்னோடு மற்றும் பலரின் உழப்பும் பங்கும் இருக்கின்றது என்பதை தெரிவித்து நிகழ்வுக்கு விடை கொடுத்தார்.


'சயாம்-பர்மா மரண இரயில்பாதை - மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு' என்ற நூல் வெளியீடு மாலை 7.00 மணியளவில் கடும் மழையின் கண்ணீர்த் துளிகளோடு நிறைவுற்றது.
என் பார்வையில்...


குறித்த நேரத்தைவிட்டு தாமதமாக நிகழ்வுகளைத் துவங்குவது இன்றைய நமது கலாச்சாரத்தோடு இணைந்துவிட்ட மறபாகிவிட்டது. பொது மக்கள் வந்து காத்திருந்தாலும் நேரத்தோடு கூட்டத்திற்கு வரும் தலைவர்கள் அரிதாகவே இருக்கின்றனர். மக்களின் வருகைக்கு காத்திருப்பதை விடுத்து இன்றைய நிலையில் தலைவர்களுக்கே அதிகம் காத்திருக்க வேண்டியுள்ளது. இவர்கள் வந்தவுடன்தான் நிகழ்ச்சியைத் தொடக்க வேண்டும் என்ற வேதாந்தத்தை மாற்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்வர வேண்டும்.இந்த நூல் வெளியீட்டுக்கு சிறப்பு வருகையாளர்கள் என்று சில தலைவர்களின் நிழற்படங்கள் பொறிக்கப்பட்ட பதாகை ஒன்றைக் கண்டேன். அதில் மாண்புமிகு சார்ல்ஸ் சந்தியாகு, மாண்புமிகு மாணிக்கவாசகம், மாண்புமிகு ரோனி லியூ, மாண்புமிகு மானோகரன், மாண்புமிகு Dr. சேவியர் ஜெயக்குமார் ஆகியோரின் நிழற்படங்களும் கண்களில் பட்டது. இந்த மாண்புமிகுகளின் அனுமதி பெற்று உறுதிபடுத்தப்பட்ட பின்னரே இந்த பதாகை அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், அதில் ஒருவர்கூட வராதது நூலின் ஆசிரியருக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்திருக்கக்கூடும். வருகையாளர்கள் மத்தியில் அவர்களின் செய்கை வருத்தத்தை தந்தது மட்டுமின்றி சினமடையவும் செய்ததாகவே உணர்ந்தேன். கல்வி தொடர்புடைய, தன் சொந்த சமுதாயம் கடந்து வந்த சூழல்களை எடுத்துக்கூறும் ஒரு சரித்திர நூலினை மதிக்கும் மாண்பை இழந்தவர்களைத்தானா மாண்புமிகுக்கள் என்று புகழ்பாடுகிறோம்? இவர்களில் மாண்புமிகு மாணிக்கவாசகம் அவர்களுக்கு உடல் நலக் கோளாறு என்று கேள்விப்பட்டேன். மற்றவர்கள் எதை நோக்கி பயணிக்கிறார்கள்? ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தலும், கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதும் தலைமைத்துவ பண்புகளில் ஒரு பகுதிதானே!

விளையும் பயிர் முளையும் போதே தெரியுமாம். இதுபோன்ற தலைவர்களுக்கு சுட்டிக்காட்டி முட்டுக் கொடுத்து வளரும் போதே சரி செய்துவிட வேண்டும். தவறாக வளர்ந்து விருட்சமாகிவிட்டால் அகற்றுவது எவ்வளவு சிரமம் என்று மலேசிய இந்தியர்களுக்கு கடந்த 30 ஆண்டுகள் கொடுத்த அனுபவப் பாடம் ஒன்றே போதுமானது.

சிறந்த சமுதாயம் செய்யும் கடப்பாடு ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது. நிகழ்கால சீறிய + தூரநோக்கு சிந்தனையே நாளைய சிறந்த சமுதாய உருவாக்கத்திற்கு வித்தாகும்.


சிந்திப்போம்! செயல்படுவோம்!பி.கு : நிழற்படங்கள் தரம் குறைந்திருப்பதற்கும் சற்று தாமதமாக நூல் வெளியீட்டுச் செய்திகளை பதிவேற்றியதற்கும்.... மன்னிப்பு கோருகிறேன்.
பகுதி 2


3. வாழ்விடம்


அட்டைகள் வெப்பநிலை கொண்ட பகுதிகளில் மிகுந்து காணப்படுகின்றன. ஆயினும், அவை சூரிய ஒளியை நேசிப்பதில்லை. நேரடி சூரிய ஒளிக்கதிர்கள் மேனியைத் தழுவாதிருக்கும் பொருட்டு கற்கள், பாறை இடுக்குகள், செடி கொடிகள், வேர்கள் என்று மறைவிடத்தை நாடி வாழ்கின்றன. சுறுங்கச் சொன்னால், அட்டைகள் வெளிச்சம் குறைந்த அல்லது இருள் படர்ந்த இடங்களில் வாழக்கூடியன.பொதுவாக, வெளிச்சம் குறைந்த அல்லது இருள் படர்ந்த நீர் பகுதிகளில் அட்டைகள் அதிகம் காணப்படும். அட்டைகள் நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை கொண்டன. எனினும், தேங்கி இருக்கும் நீரே அட்டைகளுக்கு உகந்ததாகும். காரணம் ஓடும் நீரில் எதிர்நீச்சல் போடும் ஆற்றல் அவற்றுக்கு இல்லை. ஆழமான நீர்நிலைகளிலும் அட்டைகள் வசிப்பதில்லை. காரணம் தேங்கி இருக்கும் நீரின் மேற்பகுதியில் மட்டுமே சுவாசத்திற்குத் தேவையான பிராணவாயு அதிகம் இருக்கும். குளோரின் அதிகம் கொண்ட நீரிலும் அட்டைகள் வாழாது. நீருக்கு வெளியே வரும் அட்டைகள், தன் உடலின் தோல் பரப்பில் உள்ள சுவாசத் துவாரங்களின் துணைகொண்டு சுவாசிக்கின்றன.


அட்டைகள் சத்தம் கொண்ட சூழ்நிலையை வெறுக்கின்றன. அதிக சத்தம் அட்டைகளின் இனப் பெருக்கத்திற்கும் தடையாக அமையும்.ஆக மொத்தத்தில், உண்பதையும் இனபெருக்கம் செய்வதையுமே வேலையாகக் கொண்டு பிற உயிர்களை அண்டி வாழும் அட்டைகள் மட்டுமல்ல அவ்வாறான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்த மனிதர்களும் கூனிக் குறுகி, மறைந்து ஒளிந்து வாழ்க்கையை ஓட்ட வேண்டியதாயிருக்கும்.4. உணவு
அட்டைகளின் முக்கிய உணவு உயிரினங்களின் குருதியே. ஒரு சில நீர் தாவரங்களின் இலைகளையும் அவ்வப்போது உண்ணும் பழக்கம் அட்டைகளுக்கு உண்டு.உயிரினங்களில் மேலான உயிரினம் என்று மார்தட்டிக் கொள்ளும் மனிதன் உமிழ்நீரைத் துப்பினால் உலகப் போரே வெடித்துவிடும். ஆனால், அற்பமாகக் கருதும் அட்டையின் உமிழ்நீருக்கு இன்று மருத்துவ உலகமே சிவப்பு கம்பளம் விரிக்கின்றது.அட்டைகளுக்கு மூன்று பல் தொகுதிகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றிலும் நூறு சிறு பற்கள் வீதம் மொத்தம் முன்னூறு பற்கள் இருக்கின்றன. அட்டைகள் இந்தப் பற்களின் துணை கொண்டு மற்ற உயிரினங்களின் தோல் பகுதியை முதலில் கடித்து துவாரமிடுகின்றன. பின்னர், தேக்கி வைத்திருக்கும் உமிழ்நீரை துப்புகின்றன. உமிழ்நீரில் கலந்திருக்கும் Hirudin எனும் Enzime குருதியை எளிதாக உறிவதற்கு ஏற்றவரையில் மேலும் இலகுவாக்குகின்றது.ஏறக்குறைய 10 நிமிடங்களிலிருந்து 120 நிமிடங்கள் வரை அவை உணவருந்தும். தான் உறிந்த குருதியின் கணம் தாங்காமல் பற்களை விடுவித்துக் கொண்டு அவை கீழே விழுந்துவிடுகின்றன. ஒரு முறை வயிறுமுட்ட குருதியை உறிஞ்சிய அட்டைக்கு அடுத்த ஐந்திலிருந்து ஆறு மாதங்கள் வரை உணவுத் தேவை இருக்காது.


அட்டை வளர்ப்பை தொழிலாகச் செய்ய நினைப்பவர்கள், விலாங்கு மீனையும் மயிரை மீனையும் அட்டைகளுக்கு உணவாகக் கொடுக்கலாம். காரணம், இவ்விரண்டு வகை மீன்களுக்கும் செதில் இல்லை; எளிதில் கிடைக்கக்கூடியது; செலவுகள் குறைவு. உயிரோடு இருக்கின்ற மீன்களை வாங்கி கம்பிக் கூண்டிலிட்டு அட்டை தொட்டிகளில் வைக்கலாம். மீன்கள் வைக்கப்படும் இந்த கம்பிக் கூண்டுகள் சரிபாதி மட்டுமே நீரில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். மீன்களின் உடலில் இருக்கும் குருதி உறிஞ்சப்பட்டுவிட்டால், மீன்களின் உடல் வெளுத்து காணப்படும். குருதி வெளியாக்கப்பட்ட மீன்கள் இறப்பதற்கு முன்னதாக அப்புறப்படுத்தப்பட வெண்டும்.

5. வளர்ப்பு தொட்டிகள்

அட்டைகளை மூன்று வழிமுறைகளில் வளர்க்கலாம்.

1). நீர் தேக்கங்கள்/குளங்கள் - இந்த முறை பெரிய பொருட்செலவில் அதிக எண்ணிக்கையில் (பல ஆயிரம்) அட்டைகளை வளர்ப்பதாகும்.
2). சிமெண்ட் தொட்டிகள் - இந்த முறை குறைந்த பொருட்செலவில் சில ஆயிரம் அட்டைகளை வளர்ப்பதாகும். இந்த சிமெண்ட் தொட்டிகள், வளர்க்கப்படும் அட்டைகள் வெளியில் வராத வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும். சொந்த அல்லது வாடகை நிலங்களில் இந்த முறையை பயன்படுத்தலாம்.3). நீர் தொட்டிகள் - இந்த முறை மிகக் குறைந்த பொருட்செலவில் சில நூறிலிருந்து சில ஆயிரம் அட்டைகளை வளர்ப்பதாகும். நமது வீடுகளில் நீரை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் அதே கருப்பு நிறம் கொண்ட Poly Tank தான் இந்த தொட்டிகள். ஒவ்வொரு தொட்டிகளிலும் 500-லிருந்து 700 அட்டைகள் வரை வளர்க்கலாம். இது மிகவும் எளிய முறையாதலால் சிறு தொழிலாக அட்டை வளர்ப்பை தொடங்குகின்றவர்களில் பெரும்பான்மையினர் இம்முறையையே பயன்படுத்துகின்றனர். வளர்க்கப்படும் அட்டைகள் வெளியில் 'உல்லாச உலா' செல்லாதவாறு இந்தத் தொட்டிகளின் மேற்பகுதியில் சல்லடைக் கம்பிகள் பொறுத்தப்பட்டிருக்கும்.


தொடரும்....


பி. கு: தயவு கூர்ந்து Enzime, சிமெண்ட், Poly Tank ஆகியவற்றுக்கு சரியான தமிழ்ச் சொல்லை தந்து உதவவும்.பகுதி 3


6.பயன்பாடு
7.பொருளியல் ஆய்வு
8.எனது கருத்து


ஈழ மண்ணில் சிங்கள அரசு அரங்கேற்றிவரும் தமிழ் இன ஒழிப்பு படுகொலைகளைக் கண்டித்து நேற்று கோலாலம்பூரில் அமைந்திருக்கும் ஐ.நா சபையின் அலுவளகத்தின் முன் கண்டிப்பு கூட்டம் நடத்தப்பட்டது.

'அனைத்து மக்களும் அரசியல் கட்சிகள், பொதுக் கட்சிகள், அமைப்புகள் பேதமின்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அணித் திரள வேண்டுமென' உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் திரு.பசுபதி அவர்கள் இப்பேரணிக்கு ஏற்பாடு செய்து அன்பு வேண்டுகோளும் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள், வயோதிகர்கள், பெண்கள் என்று பாராது மூர்க்கத்தனமாக தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு எதிராக உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தங்களின் மன வேதனைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதுகாரும் ஐக்கிய நாடுகளின் சபையின் போக்கு செவிடன் காதில் சங்கு ஊதிய கதையாகவே இருக்கின்றது. கொசோவோ, காசா, கிழக்குத் தீமோர் போன்ற இடங்களில் காட்டிய அக்கறையில் ஒரு விழுக்காடுகூட இலங்கைத் தமிழர்கள்பால் காட்டத்தவறியிருக்கும் ஐ.நா சபையின் வக்கற்ற நிலைகுறித்து கூட்டத்திற்கு வந்திருந்த மலேசியத் தமிழர்கள் தங்கள் உள்ளக் குமுறல்களை கொட்டித் தீர்த்தனர்.


கண்டனக் குரல் எழுப்ப பெரும் திரளாக தமிழர்கள் வருவார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்தனர். மின்னியல் மற்றும் அச்சு ஊடகங்கள் வாயிலாக 'பேரணி' தொடர்பான தகவல்கள் மக்களுக்குச் சேர்க்கப்பட்டன. ஆயினும், இந்த கண்டனக் கூட்டத்திற்கு அரசு சார்பற்ற இயக்கங்களிலிருந்தும், அரசியல் கட்சிகளிலிருந்தும், இயக்கங்களைச் சாராத 500க்கும் அதிகமான தமிழ் நெஞ்சங்களே வந்திருந்தது மனதிற்குச் சற்று வருத்தத்தைத் தந்தது. மலேசியாவில் இந்தியர்களை பிரதிநிதிக்கும் ஒரே கட்சி என்று மார்தட்டிக்கொள்ளும் மலேசிய இந்தியர் காங்கிரசிலிருந்து (MIC) ஒருவர்கூட வரவில்லையா என்ற கேள்விக்குறியும் எழும்பவே செய்தது. காரணம், குறை குடங்கள் தழும்பும் என்பதைப் போல், அக்கட்சியைச் சார்ந்த ஒரு சிலரே இது போன்ற நிகழ்வுகளுக்கு வந்தாலும் வானத்துக்கும் மண்ணுக்கும் குதித்து இவர்கள் போடும் கூப்பாடு மற்றவர்களை இவர்கள்பால் சுளித்த முகத்தோடு திரும்பிப் பார்க்க வைக்கும். அவ்வாறு ஏதும் நேற்று நடக்கவில்லை. பொதுவாக அரசியல் ஆதாயம் இருந்தால் மட்டுமே இவர்களின் பங்களிப்பை எதிர்பார்க்கலாம் என்றே தோன்றுகின்றது. தமிழன் என்ற உணர்வே இல்லாத இவர்கள்தானா (ஆளும் பாரிசான் அரசாங்கத்திலிருக்கும் அனைத்து இந்தியர் கட்சிகளும்) நம் நாட்டுத் தமிழர்களுக் குரல் கொடுக்கப் போகின்றார்கள்?

திரு.சி. பசுபதி அவர்களோடு நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். மாணிக்கவாசகம், ம.மனோகரன், சார்ல்ஸ் சந்தியாகு ஆகியோரும் இக்கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஏறக்குறைய 2.30 மணியளவில் இலங்கையில் நடக்கும் போர் வன்முறைகளைக் கண்டித்தும், ஐ.நா சபையின் ஒருதலைப் பட்ச செயல்முறையைக் கண்டித்தும், ஐ.நாவில் இலங்கை தொடர்பான உடனடி விவாதம் நடத்தப்பட வேண்டும்; அரசியல் நிலைத்தன்மை மற்றும் ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய ஆட்சேப மனு மலேசியாவுக்கான ஐ.நா பிரதிநிதியிடம் கொடுக்கப்பட்டது.

இது போன்ற கூட்டங்களுக்கும் பேரணிகளுக்கும் மக்கள் பகிரங்க ஆதரவு வழங்க வேண்டும். வராமல் இருப்பதற்கு ஆயிரம் காரணங்களை அடுக்கத் தெரிந்த இவர்களது சிந்தைக்கு, வருவதற்கு சில காரணங்கள்கூடவா கிடைப்பதில்லை?; மனம் வெம்புகின்றது. மலேசியாவில் இப்போது நாம் முன்னோட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம்.

மு.கு : இந்தக் கட்டுரை மூன்று பகுதிகளாக பதிவேற்றப்படும்.


பகுதி 1

1. பொது

இந்தத் தலைப்பைப் பார்த்ததுமே சிலருக்கு வாந்தி வருவதைப்போல் தோன்றும்; வேறு சிலருக்கு உடம்பில் மயிர் சிலிர்த்து நிற்கும் காரணம் அதன் அருவறுப்புமிக்கத் தோற்றம்தான்; மற்றும் சிலரின் சிந்தனையில் இந்த அர்ப்ப உயிரினத்தையும் பணமாக்க முடியுமா என்ற கேள்வியும் மூளையைத் துளைத்துக் கொண்டிருக்கும். ஒரு சிலருக்கு மட்டுமே அட்டையின் நன்மைகளும் அதன் பொருளாதார வலிமையும் இந்நேரம் புரிந்திருக்கும்.

மலேசியாவில் பொறுத்தவரையில் கடந்த ஓராண்டு காலமாக பயனற்றுக்கிடந்த அட்டைகளுக்கு எழுந்த மதிப்பு சொல்லில் அடங்காது. வார இறுதியில் நாளிதழ்களைத் திறந்தால் நிச்சயம் அட்டை வளர்ப்புப் பயிற்சிகளைப் பற்றியத் தகவல்களும் விளம்பரங்களும் தவறாது இடம்பெறுவதைக் காணலாம். அப்பயிற்சிகளில் கொடுக்கப்படும் அட்டை வளர்ப்பு தொடர்பான தகவல்களின் நம்பகத்தன்மையை ஆராய்வதும், அட்டை வளர்ப்பை சுயதொழிலாகச் செய்ய முன்வரும் இளைஞர்களுக்குச் சிறிய அளவிலான அடிப்படைத் தகவல்களைத் தொகுத்துத் தரும் களமாகவும் இந்தக் கட்டுரை அமைந்திருக்கும்.


2. அட்டை - பொதுவான தகவல்கள்

அட்டைகள் மற்ற உயிரினங்களின்பால் அண்டி அதன் குருதியை உறிந்து வாழும் ஓர் உயிரினம். நையப் புடைக்க உறிந்து களித்தப்பின் தனது இனப்பெருக்கத்தில் தீவிரம் காட்டுவதுதான் அட்டைகளின் இயல்பு.

உலகில் மொத்தம் 650 வகை அட்டைகள் இருப்பதாக ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். அவை அளவிலும், தோற்றத்திலும் மாறுபட்டிருக்கும். மலேசியாவில் பல வகை அட்டைகள் காணப்பட்டாலும் இரண்டு வகை அட்டைகள் மட்டுமே பெருமளவில் வணிப நோக்கத்துக்காக வளர்க்கப்படுகின்றன. அவை European
Medicinal Leech (Hirudinaria Manliness) - Green and Brown. பச்சை நிறத்திலான அட்டைகள் நதியோரங்களிலும் குளத்தோரங்களிலும் வழக்கமாகக் காணப்படுகின்றன. சாக்லெட் நிறத்திலான அட்டைகளை வழக்கமாக வயல்வெளிகளிலே காணலாம். வழக்கு மொழியில் நாம் இதனை மாட்டு அட்டைகள் என்று அழைக்கிறோம்.

அட்டைகள் மெலிந்து சிறியதாக இருந்தாலும், ஓர் புள்ளியிலிருந்து அடுத்த புள்ளிக்குத் தாண்டும் போது அதன் உடல் நீண்டு விரிந்து (elastic) கொடுக்கிறது (2 மடங்கு).

அட்டைகளுக்கு கண்கள் கிடையாது. அதனால்தானோ என்னவோ, அது நல்லவன் கெட்டவன் என்று பார்ப்பதே இல்லை.

அட்டைகள் கூடிய வரை இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் வாழக்கூடியன. ஒவ்வொரு அட்டையும் தனது வாழும் காலத்தில் சராசரி 30-லிருந்து 300 முட்டைகள் வரை இடும். ஒவ்வொரு அட்டையும் முட்டை இடும் தன்மை கொண்டது. ....புரிகிறது.. ஆண் அட்டையும் முட்டை இடுமா என்று யோசிக்கின்றீர்களா? ஒவ்வொரு அட்டையும் இருபால் உறுப்புகள் கொண்டவை. அவையே ஆணாகவும் பெண்ணாகவும் சூழ்நிலைக்குத் தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்ளும்.


தொடரும்....

பி. கு:
தயவு கூர்ந்து சாக்லெட் என்பதற்கு சரியான தமிழ்ச் சொல்லை தந்து உதவவும்.

பகுதி 2
3. வாழ்விடம்
4. உணவு
5.வளர்ப்புத் தொட்டிகள்

பகுதி 3
6.பயன்பாடு
7.பொருளியல் ஆய்வு
8.எனது கருத்து


நூல் வெளியீடு


நூல்: சயாம்-பர்மா மரண இரயில்பாதை-மீட்க்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு


ஆசிரியர்: சீ. அருண் (கிள்ளான்)
கைபேசி :012 3002911


நூல் வெளியிடப்படும் இடங்கள்


இடம் :நெகிரி மாநில ம.இ.கா மண்டபம்
நாள் : 22-02-2009 (ஞாயிறுக்கிழமை)
நேரம் : மாலை மணி 5.00


இடம் :கோலாசிலாங்கூர் ஆலய மண்டபம்
நாள் : 01-03-2009 (ஞாயிறுக்கிழமை)
நேரம் : பிற்பகல் மணி 2.00


இடம் :கிள்ளான் சுந்தரராச பெருமாள் ஆலய மண்டபம்
நாள் : 15-03-2009 (ஞாயிறுக்கிழமை)
நேரம் : பிற்பகல் மணி 2.00


இந்த நூல் தூசு அண்டிக்கிடக்கும் ஒரு பாவப்பட்ட சரித்திரத்தை பல ஆண்டுகளுக்குப் பிறகு தட்டி, சுத்தம் செய்து, தமிழர்கள் பட்ட இன்னல்களை உலகத்துக்கு எடுத்துரைக்கும் நூலாகக் கருதப்படுகிறது.


உலகிலேயே மிகவும் மோசமான தொடர்வண்டி தண்டவாளம் என்றால் அது நிச்சயமாக 'சயாம்-பர்மா மரண இரயில்பாதை'யாகத்தான் இருக்க முடியும். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குள் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்ட இத்தண்டவாளம், 15 மாதங்களிலே பயங்கர காடுகளை அழித்து, மலைகளைக் குடைந்து பூர்த்தி செய்யப்பட்டது.


நவீன இயந்திரங்கள் அதிகம் கண்டுபிடிக்கப்படாத அக்காலக்கட்டத்தில் குறித்த காலத்துக்கு முன்னதாகவே வேலைகள் முடிக்கப்பட்டது பெருமைதான். ஆனால், இந்த தண்டவாளத் திட்டம் தொடங்கிய நாள் முதல் முடியும் நாள் வரை மடிந்த மனித உயிர்கள்தான் எத்தனை? எத்தனை? சிதைந்த குடும்பங்கள்தான் எத்தனை? எத்தனை?


நம் மலேசியத் தமிழர்களுக்கும் இந்த 'சயாம்-பர்மா மரண இரயில்பாதை'க்கும் அணுக்கமான தொடர்பு உள்ளது. மலேசியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்டவர்களில் பெரும் பகுதியினர் தமிழர்களே. அவர்களின் கதைகளை நம் பெற்றோர்கள் வாயிலாகவும் உயிரோடு திரும்பிவந்த சில தாத்தா-பாட்டிகள் வாயிலாகவும் கேட்டிருக்கிறோம். ஆனால், நாளைய தலைமுறைக்கு இவையாவும் கதைகளாகவே போய்விடும்.


சரித்திர நிகழ்வுகளையும் சான்றுகளையும் ஆவணப்படுத்தாமையால் தமிழர்கள் இழந்தது பல. காலங்கடந்து வரலாற்றுச் சான்றுகளைத் தேடிப்பிடிப்பது மிகவும் சிக்கல் நிறைந்த வேலை. பல காலம் செய்த ஆய்வின் வழி, தேடி எடுத்த சான்றுகளை புத்தகமாக வெளியிடும் முயற்சி பாராட்டுக்குறியது; போற்றத்தக்கது.


எழுத்தாளர்களுக்கு ஊக்க மருந்தே நூல் விற்பனைதான். இதுபோன்ற சிறந்த நூல்கள் மேலும் வெளிவர வேண்டுமானால் வாசகர்கள்தான் தோல் கொடுக்க வேண்டும்.