2:13 AM | Posted in

பொங்கலோ பொங்கல்.. பொங்கலோ பொங்கல்..


மின் அஞ்சலை முடுக்கினால் பொங்கல் வாழ்த்துகள் வண்ண வண்ணக் காட்சிகளாக முண்டியடித்து வரிசையில் நிற்கின்றன. கைத்தொலைபேசியின் அலரலும் ஓய்ந்தபாடில்லை. எங்கும் பொங்கல் அலைகள். பொங்கல், பானையில் பொங்கும் முன்னே மனதில் பொங்கி வழிகிறது. அதிலும் குறிப்பாக ஆங்கில ஆண்டு 2009-ல் வரும் பொங்கலுக்கு மற்றுமொரு தனிச் சிறப்பும் உண்டு. இவ்வாண்டு தை முதல் நாள், " தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் திருநாள்" எனும் முழக்கத்தோடு நம்மை அரவணைக்க வருகிறது.தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரின் தலைமையில், 1931-ஆம் ஆண்டில், ஐநூற்றுக்கும் மேற்பட்ட நற்றமிழ் அறிஞர் பொருமக்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி, தை மாதத்தின் முதல் நாளே தமிழ் ஆண்டின் பிறப்பு என்று ஒருசேர மொழிந்தனர். அதோடு, தமிழ் ஆண்டை தமிழ்த்தாயின் தலைமகன் திருவள்ளுவரின் பொயரால் அழைக்கப்பட வேண்டும் என்றும் முழங்கினர். ஏசு கிருத்து பிறப்பிற்கு 31 ஆண்டுகளுக்கு முன் அய்யன் திருவள்ளுவர் பிறந்திருக்கக்கூடும் என்றும் பல ஆதாரங்களின் துணை கொண்டு இறுதியிட்டனர். இங்கே, சிலருக்குக் கேள்விகள் எழக்கூடும்; அறிவியல் ஆதாரங்கள், தடையங்கள் இல்லாத சூழலில் இந்த முடிவை ஏற்றல் தகுமா? அறிவுடமையாகுமா? என்று. கிருத்துவ மதத்தினர் அய்யன் ஏசுவையும், இசுலாமியர் அன்னல் நபிகள் நாயகத்தையும், பொளத்தர்கள் அய்யன் புத்தரையும் அடிப்படையாகக் கொண்டு அவர்களது ஆண்டை கணக்கிடுகின்றனர். இந்தப் பொருமக்கள் இற்றை நாளில் பிறந்தார் என்பதை மெய்ப்பிக்கும் சான்றிதழ்கள் கொண்டா அவரவர் சமயங்களுக்கு அந்தச் சமயப் பெரியோர்களின் பெயர்களில் ஆண்டுகள் நடைமுறையில் இருக்கின்றன? மற்றுமொரு வழக்கத்தையும் நாம் இங்கே கவனித்தல் நலம் பயக்கும். நம் முன்னோர்கள் சமகால நிகழ்வுகளை வரலாற்றுப் பதிவுகளாகத் தொடுத்து வைக்கும் வழக்கம் இன்றி வாழ்ந்திருக்கின்றனர். ஆனால், தமிழர்களின் சமகால நிகழ்வுகளை கவிதைகள், செய்யுள்கள் மற்றும் பாடல்கள் வாயிலாகப் பதிவு செய்து விட்டுச் சென்றிருக்கின்றனர் என்பதையும் நாம் மறக்கலாகாது. இலக்கணம், மருத்துவம், வேளாண்மை, சரித்திரம் என்று எல்லாவகை அறிவுடமை சொத்துக்களெல்லாம் கவிதைக்குள்ளும் பாடல்களுக்குள்ளும் அடக்கம். ஆகவே, அன்று ஐநூற்றுக்கும் மேற்பட்ட நற்றமிழ் அறிஞர் பொருமக்கள் விரிவான ஆய்விற்குப் பின்னரே தங்கள் முடிவுகளை அறிவித்திருக்கக்கூடும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.


அரை நூற்றாண்டு கடந்த பின்னரே 1971ல் கலைஞர் ஆட்சியில் திருவள்ளுவராண்டு முறை அரசு நாட்குறிப்பில் இடம் பெற்றது. புரட்சித் தலைவர் ராமச்சந்திரன் அவர்களால் 1981-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் அனைத்து அலுவல்களிலும் திருவள்ளுவராண்டு கட்டாயமாக்கப்பட்டது. கடந்த ஆண்டில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக நடைமுறைப்படுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசு சாசனத்த்தில் சட்டமாக்கப்பட்டது. அதன் காரணமாகவே, இந்த ஆண்டு தைப் பொங்கல் மேலும் சிறப்பு பெற்றிருக்கின்றது. இந்த ஆண்டு தைப் பொங்கல் மேலும் மகிழ்வைத் தந்தாலும், முழுக்க முழுக்கத் தமிழர்களே வாழும் தமிழ்த்திரு மண்ணில் மொழி நலம் பேனும் சட்டம் நடைமுறைப்படுத்த 78 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றதை நினைக்கும்போது மனம் சற்றே சஞ்சலப்படுகின்றது.


மலேசியாவைப் பொறுத்தமட்டில், தைப் பொங்கலைக் கொண்டாடும் பெரும் பகுதி தமிழர்கள், இத்திருநாளை மூன்றாம் தர பண்டிகையாகத்தான் கொண்டாடுகின்றார்கள். மலேசிய மண்ணில் வாழும் இந்திய வழித் தோன்றல்களில் 80 விழுக்காட்டினர் தமிழர்களாக இருந்தும், ஆரிய வழி தீபத் திருநாளுக்கு பொது விடுப்பு கொடுக்கப்பட்டதும், பொங்கல் திருநாளுக்கு பொது விடுப்பு மறுக்கப்பட்டதும்தான் காரணம் எனத் தோன்றுகிறது. மலேசிய வாழ் தமிழர்களின் வாழ்க்கையில் தீபாவளி நயவஞ்சகமாகத் தினிக்கப்பட்டதை முதலில் நாம் உணர வேண்டும். காரணம், மலேசிய சட்டங்கள் இயற்றப்பட்ட காலக்கட்டத்தில், தமிழர்கள் அல்லாதவர்களே அரசியலமைப்பு - சட்ட ஆலோசனைக் குழுக்களில் இடம் பெற்றிருந்தனர். அதனால், அவர்களின் கலாச்சாரத்தை வளர்க்கும் முயற்சியிலேயே முழு கவனத்தையும் செலுத்தினார்கள். தமிழர்கள், தமிழர் கலை, கலாச்சாரம், மரபுகள் நாசுக்காக அழிக்கப்படுகின்றது என்பதைக்கூட உணராதவர்களாக, எது தமிழர் கலை, கலாச்சாரம் என்பதையும் அறியாதவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும்; மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ச் சமுதாயம் பாமறச் சமுதாயமாக, கல்வியறிவு குன்றிய சமுதாயமாக, உரிமைகள் மறுக்கப்பட்ட சமுதாயமாக இருந்த காரணத்தால் தொலைத்த அடையாளங்கள் அதிகம். ஆனால், இன்றைய சூழ்நிலை வேறு. இழந்தவற்றைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதில் பலன் இல்லை; மீட்டெடுக்கும் கடமையை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு. துனிந்து நில்; தொடர்ந்து செல்; தோல்வி கிடையாது தமிழா!!!

தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்பத்தன்று நூறன்று பன்னூ றன்றுபல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்நித்திரையில் இருக்கும் தமிழா!சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு - (புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்)
��

4 comments:

சுப.நற்குணன்,மலேசியா. said...

மலேசியத் தமிழ் வலைப்பதிவு அன்பரே,
வணக்கம்! வாழ்க! தமிழ்நலம் சூழ்க!

அருமையான - பயனான பதிவிட்டுள்ளீர்கள்.
பாராட்டுகள்.

தங்களுக்குப் பொங்கல்,
திருவள்ளுவராண்டு 2040
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

தமிழிய விழுமியங்களோடு
தமிழியல் வழியில் வாழ்ந்து
வெற்றிகள் பெறுவோம்.

தங்கள் வலைப்பதிவை என்னுடைய
'திருமன்றில்' திரட்டியில்
இணைத்துள்ளேன்.

http://thirumandril.blogspot.com
பார்க்கவும். நன்றி..!

VIKNESHWARAN ADAKKALAM said...

தமிழர் திருநாள் வாழ்த்துகள்...

மு.வேலன் said...

பொங்கல் வாழ்த்துக்கள்!

சுப.நற்குணன்,மலேசியா. said...

இனிய அன்பரே வணக்கம்.

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு-2 பின்வரும் வகையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

நாள்: 25-1-2009(ஞாயிறு)
நேரம்: பிற்பகல் 2.00
இடம்: தமிழியல் நடுவம், பாரிட் புந்தார், பேரா

இந்தச் சந்திப்பில் கலந்து சிறப்பிக்கத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இதன் மேல் விவரங்களை என் வலைப்பதிவில் காண்க.
http://thirutamil.blogspot.com

தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

அன்புடன்,
ஏற்பாட்டுக் குழுவின் சார்பில்,
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்