ஈழ மண்ணில் சிங்கள அரசு அரங்கேற்றிவரும் தமிழ் இன ஒழிப்பு படுகொலைகளைக் கண்டித்து நேற்று கோலாலம்பூரில் அமைந்திருக்கும் ஐ.நா சபையின் அலுவளகத்தின் முன் கண்டிப்பு கூட்டம் நடத்தப்பட்டது.

'அனைத்து மக்களும் அரசியல் கட்சிகள், பொதுக் கட்சிகள், அமைப்புகள் பேதமின்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அணித் திரள வேண்டுமென' உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் திரு.பசுபதி அவர்கள் இப்பேரணிக்கு ஏற்பாடு செய்து அன்பு வேண்டுகோளும் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள், வயோதிகர்கள், பெண்கள் என்று பாராது மூர்க்கத்தனமாக தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு எதிராக உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தங்களின் மன வேதனைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதுகாரும் ஐக்கிய நாடுகளின் சபையின் போக்கு செவிடன் காதில் சங்கு ஊதிய கதையாகவே இருக்கின்றது. கொசோவோ, காசா, கிழக்குத் தீமோர் போன்ற இடங்களில் காட்டிய அக்கறையில் ஒரு விழுக்காடுகூட இலங்கைத் தமிழர்கள்பால் காட்டத்தவறியிருக்கும் ஐ.நா சபையின் வக்கற்ற நிலைகுறித்து கூட்டத்திற்கு வந்திருந்த மலேசியத் தமிழர்கள் தங்கள் உள்ளக் குமுறல்களை கொட்டித் தீர்த்தனர்.


கண்டனக் குரல் எழுப்ப பெரும் திரளாக தமிழர்கள் வருவார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்தனர். மின்னியல் மற்றும் அச்சு ஊடகங்கள் வாயிலாக 'பேரணி' தொடர்பான தகவல்கள் மக்களுக்குச் சேர்க்கப்பட்டன. ஆயினும், இந்த கண்டனக் கூட்டத்திற்கு அரசு சார்பற்ற இயக்கங்களிலிருந்தும், அரசியல் கட்சிகளிலிருந்தும், இயக்கங்களைச் சாராத 500க்கும் அதிகமான தமிழ் நெஞ்சங்களே வந்திருந்தது மனதிற்குச் சற்று வருத்தத்தைத் தந்தது. மலேசியாவில் இந்தியர்களை பிரதிநிதிக்கும் ஒரே கட்சி என்று மார்தட்டிக்கொள்ளும் மலேசிய இந்தியர் காங்கிரசிலிருந்து (MIC) ஒருவர்கூட வரவில்லையா என்ற கேள்விக்குறியும் எழும்பவே செய்தது. காரணம், குறை குடங்கள் தழும்பும் என்பதைப் போல், அக்கட்சியைச் சார்ந்த ஒரு சிலரே இது போன்ற நிகழ்வுகளுக்கு வந்தாலும் வானத்துக்கும் மண்ணுக்கும் குதித்து இவர்கள் போடும் கூப்பாடு மற்றவர்களை இவர்கள்பால் சுளித்த முகத்தோடு திரும்பிப் பார்க்க வைக்கும். அவ்வாறு ஏதும் நேற்று நடக்கவில்லை. பொதுவாக அரசியல் ஆதாயம் இருந்தால் மட்டுமே இவர்களின் பங்களிப்பை எதிர்பார்க்கலாம் என்றே தோன்றுகின்றது. தமிழன் என்ற உணர்வே இல்லாத இவர்கள்தானா (ஆளும் பாரிசான் அரசாங்கத்திலிருக்கும் அனைத்து இந்தியர் கட்சிகளும்) நம் நாட்டுத் தமிழர்களுக் குரல் கொடுக்கப் போகின்றார்கள்?

திரு.சி. பசுபதி அவர்களோடு நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். மாணிக்கவாசகம், ம.மனோகரன், சார்ல்ஸ் சந்தியாகு ஆகியோரும் இக்கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஏறக்குறைய 2.30 மணியளவில் இலங்கையில் நடக்கும் போர் வன்முறைகளைக் கண்டித்தும், ஐ.நா சபையின் ஒருதலைப் பட்ச செயல்முறையைக் கண்டித்தும், ஐ.நாவில் இலங்கை தொடர்பான உடனடி விவாதம் நடத்தப்பட வேண்டும்; அரசியல் நிலைத்தன்மை மற்றும் ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய ஆட்சேப மனு மலேசியாவுக்கான ஐ.நா பிரதிநிதியிடம் கொடுக்கப்பட்டது.

இது போன்ற கூட்டங்களுக்கும் பேரணிகளுக்கும் மக்கள் பகிரங்க ஆதரவு வழங்க வேண்டும். வராமல் இருப்பதற்கு ஆயிரம் காரணங்களை அடுக்கத் தெரிந்த இவர்களது சிந்தைக்கு, வருவதற்கு சில காரணங்கள்கூடவா கிடைப்பதில்லை?; மனம் வெம்புகின்றது. மலேசியாவில் இப்போது நாம் முன்னோட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம்.




1 comment:

கிருஷ்ணா said...

வருவதற்கு மனமிருந்தும் மார்க்கமின்றி தவிப்பது உங்களுக்குத் தெரிந்த ஒன்றுதான். உங்கள் போன்றவர்களின் சமூக சேவை தொடரட்டும்..