21-ஆம் நூற்றாண்டின் மிக மோசமான இனப்படுகொலையை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இலங்கை அரசை கண்டித்தும், இலங்கை அரசின் இந்த மனித உரிமை மீறல்களுக்கும் தமிழர் இன ஒழிப்புக்கும் துணை போகும் இந்திய அரசைக் கண்டித்தும் நேற்று (06-02-2009) கோலாலம்பூரில் இந்திய தூதரகத்தின் முன் கண்டனப் பேரணி நடைபெற்றது. பயிரைக் காக்க வேண்டிய இந்திய அரசே, தினம் தினம் கொத்துக் கொத்தாக மடியும் தமிழர்களின் குருதியை குடிக்கும் டிரக்குலா பேயாக/அனக்கோண்டாவாக மாறிய ஈனச் செயலைக் கண்டிக்கும் ஆட்சேப மனு ஒன்று மலேசியாவிற்கான இந்தியத் தூதரிடம் வழங்கப்பட்டது. காலை 11.00 மணி தொடங்கி பிற்பகல் 2.30 மணி வரை நீடித்த இக்கண்டனப் பேரணியில் 3,500-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் நேடிப் பார்வைக்கு கொண்டு செல்லப்படுமென இந்தியத் தூதர் அசோக் கந்தா அவர்களால் உறுதியளிக்கப்பட்டுள்ள அம்மனுவில் நான்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அவை:

1. விடுதலைப்புலிகளுடன் போர் என்ற பெயரில் இலங்கைத் தமிழர்களை கொன்றொழிக்கும் இலங்கை சிங்கள அரசின் அடாவடிதனத்தை இந்தியா தலையிட்டு நிறுத்தவேண்டும்.

2. போரிடும் தரப்புக்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்.

3. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வு அல்லது புணரமைப்புக்கான அனைத்து உதவிகளும் உடனடியாக செய்துத்தரப்பட வேண்டும்.

4. ஈழத்தமிழர் நாட்டை அங்கீகரிக்க வேண்டும்.


பல இடைபாடுகளுக்கிடையே இந்த எதிர்ப்பு பேரணியை குளோபல் பீஸ் இனிசியேட்டிவ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது குறிபிடத்தக்கது. பினாங்கு துணை முதலமைச்சர் மாண்புமிகு ராமசாமி அவர்கள் இப்பேரணிக்குத் தலைமை தாங்கினார். குளோபல் பீஸ் இனிசியேட்டிவ் அமைப்பின் தலைவர் சி. பசுபதி அவர்களோடு நாடாளுமன்ற உறுப்பினர்களான கோபிந்த் சிங் டியோ, எஸ். மாணிக்கவாசகம், ம.மனோகரன், நெகிரி செம்பிலான் சட்டமன்ற உறுப்பினர் பி.குணா ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


இந்தியத் தூதரகத்தின் முன் நடத்தப்பட்ட இந்த எதிர்ப்புக் கூட்டத்திற்கு சுவாராம் தலைவர் கா. ஆறுமுகம், மலேசிய சோசலிசக் கட்சி பொதுச்செயலாளர் அருள்செல்வன், மலேசிய திராவிடக் கட்சியின் தலைவர் ரேசு. முத்தையா, இண்ட்ராப் மக்கள் சக்தி இயக்கத்தின் ஒருங்கிணப்பாளர் டி. தனேந்திரன், மலேசிய தமிழ் அறவாரியத்தின் தலைவர் கா. உதய சூரியன் போன்றோர் இலங்கையில் நம் தமிழ் உறவுகள் அழிக்கப்படுவதை தாழாது வந்திருந்த கூட்டத்தினரிடையே காணப்பட்டனர். எந்தக் கட்சிக் கொடியும் ஏந்திவராத கூட்டத்தோரிடையே ம.இ.கா இளைஞர் பகுதியினர் சுமார் 100 பேர் தங்களின் கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட பாதகைகளை ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

“India, what are you waiting for?”, “India, to protect your interests in Sri Lanka, Don’t Allow Sri Lankan Racist to kill the Tamils!”, "இந்திய அரசே, ஈழத்தமிழர்களைக் கொல்ல துணை போகாதே" என்று பொறிக்கப்பட்ட பதாகைகள் ஏறாளமாகக் காணப்பட்டன. "தமிழினத் துரோகிகள்" என்று பொறிக்கப்பட்ட பதாகையில் பிரதமர் மன் மோகன் சிங், சோனியா காந்தி, கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களும் காணப்பட்டது. இந்தப் பதாகையை பார்ப்பவர்களெல்லாம் தங்கள் காலணிகளை கொண்டு ஆராதனை செய்த காட்சியை சிறு வரிகளில் அடக்கிவிட முடியாது.

மலேசிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இலங்கை அரசின் போர் கொடுமைகளைக் கண்டிக்கும் வகையில் சிறப்பு விவாதம் நடத்தப்பட வேண்டுகோள் முன்வைக்கப்படுமென மான்புமிகு கோபின் சிங் தெரிவித்தார். அப்போது அங்கே கூடியிருந்தவர்களில் ஒருவர், "இந்த நாட்டு அரசாங்கத்தார் பாலசுதீனத்தில் ஒருவர் இருவர் கொல்லப்பட்டால் உடனே நாடாளுமன்றத்தில் கூக்குரலிட்டு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவார்கள். ஆனால், தினமும் 60-70 அப்பாவித் தமிழர்களின் உயிர்களைக் குடிக்கும் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் போட கோரிக்கையை முன்வைக்க வேண்டியிருக்கிறது. வேடிக்கையாயிருக்கைய்யா நம்ம நாட்டு மனித உரிமை கொள்கை" என்று தனது வயிற்றெரிச்சலை கொட்டிச் சென்றார்.

இந்தக் கண்டனப் பேரணியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முப்பதுக்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களோடு, 10 கலகத் 'தொடுப்பு' (FRU) காவலர்களும் காணப்பட்டனர் (வழக்கமாக வண்டி வண்டியாக வந்திறங்குபவர்கள், வண்டி கட்டிக் கொண்டு ஈப்போ மாநகரை நோக்கி நீர் பாச்சச் சென்றிருப்பதாகக் கேள்வி !)

சொல்லடி சிவசக்தி


தமிழின் காவலன், தமிழரின் தலைவன் என்ற அடைமொழிகளை ஏந்தி நிற்கும் தகுதி இனி கலைஞர் கருணாநிதிக்கு இல்லை. கலைஞர் நீலிக்கண்ணீர் வடிப்பது உலகத் தமிழர் அனைவருக்கும் தெளிவாகிவிட்டது. பதவி, பணம் என்ற இரண்டு பிசாசுகளே கலைஞருக்கு இரு கண்கள் என்பதை தமிழ் ஈழம் தொடர்பான அவரது அண்மைய உரைகள் மெய்ப்பித்துவிட்டன.

ஈழ வரலாற்றை, விடுதலைப்புலிகள் உருவாக்கப்பட்ட வரலாற்றை "புளித்து போய்விட்டது" என்று தனது கறைபடிந்த சிந்தனையால் உதிர்த்தது வேதனைத் தருகிறது. சமகால வரலாற்றை விளங்கிக் கொள்ளத் தவறிய கலைஞரா என்றோ வாழ்ந்த மனோகராவையும் கண்ணகியையும் சரியாக செதுக்கியிருக்கப் போகிறார்?

தமிழ் ஈழம் என்ற தனிநாடு உருவாகிவிட்டால் தனக்கு இதுவரை உலகத் தமிழர்கள் வழங்கிய சிறப்பும் மதிப்பும் குன்றிவிடும்; 'உலகத் தமிழர் தலைவர்' என்ற மகுடம் சரிந்துவிடும்; பிரபாகரனிடம் எல்லாவற்றையும் பரிகொடுத்துவிடுவோம் என்ற எண்ணத்தில் இன்று அப்பாவித் தமிழர்களை இலங்கை அரசு படை கொண்டு அழிப்பதைப் பார்த்து ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். இலங்கை அரசுக்கு இந்திய அரசு நல்கிவரும் இராணுவ உதவிகளையும் கண்டும் காணாததுபோல் பாசாங்கு செய்கிறார்.

இதே நிலைதான் மலேசிய மண்ணிலும். இந்தப் பேரணிக்கு அரசு சார்பற்ற அமைப்புதான் (NGO) ஏற்பாடு செய்திருந்தது. மலேசியாவில் உள்ள எதிர்கட்சிகளைச் சேர்ந்த இந்திய பிரதிநிதிகள் அதிகமாக வந்து தங்களது ஆதரவை புலப்படுத்திக் கொண்டனர். ஆனால், ஆளும் பாரிசான் அரசங்கத்தில் அங்கம் வகிக்கும் இந்தியர் கட்சிகளிலிருந்து ஒரு தமிழ் மான்புமிகுவையும் காண்முடியவில்லை. இவர்களுக்கெல்லாம் மனம் பாறையாகிவிட்டதா? இவர்களும் மனிதர்கள்தானா? இந்தத் தரங்கெட்ட மனிதரை தமிழராய் படைத்துவிட்டாய், ஏனடி சிவசக்தி?

உலகலாவிய தொடர் நெறுக்குதல்கள் இந்திய அரசின் கண்களைத் திறக்குமா? தமிழ் நாடு துணிந்து குரல் கொடுக்குமா? இன்னும் பல முத்துக்குமார்கள் தீ குளித்து, பல ஆயிரம் அப்பாவி ஈழத் தமிழர்கள் மண்ணுக்கு உரமான பிறகுதான் ஐக்கிய நாடுகள் சபை திரும்பிப் பார்க்குமா? சொல்லடி சிவசக்தி.


மேலும் சேய்திகள் : மலேசியா கினி, திருத்தமிழ்

3 comments:

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

superlinks said...

hi :)

கிருஷ்ணா said...

அருமை நண்பா..

உங்கள் மாடப்புறா இன்னும் உயர உயர சிறகடிக்க வாழ்த்துக்கள். உங்கள் நையாண்டி தமிழும் நீடுழி வாழ்க..

ஆங்காங்கே நடக்கும் போராட்டங்களை சுடச்சுடத் தரும் உங்கள் சுந்தரத் தமிழுக்கு வணக்கம்!